'சொன்னத செஞ்சிருவாங்க போல'...151 ரன்னுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா...சீட்டு கட்டை போல் விக்கெட்களை சரிய விட்ட பௌலர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 28, 2018 11:04 AM
bumrah bowling has been destroyed Australian team

இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்,ஆஸ்திரேலிய அணி, 151 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.பாக்சிங் டே’ நாளில் தொடங்கிய இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாராவின் அசத்தலான சதம் இந்திய அணியின் ஸ்கோரை அபாரமாக உயர்த்தியது. விராத் கோலி 82 ரன்களும்,மயங்க் அகர்வால் 76 ரன்களும் எடுத்தனர்.

 

இந்நிலையில் நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது.இதையடுத்து இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியால் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.மேலும் பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியதால் அந்த அணி வீரர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. இதனால் விக்கெட்கள் சீட்டு கட்டு போல் சரிய தொடங்கியது.

 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸும் கேப்டன் டிம் பெயினும் அதிகப்பட்சமாக தலா, 22 ரன் எடுத்தனர்.மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

 

இந்திய தரப்பில் பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.மேலும் ஜடேஜா 2 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

Tags : #CRICKET #VIRATKOHLI #JASPRIT BUMRAH #INDIA VS AUSTRALIA