காலமான ’கருணாநிதி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்றுவரை.. நடந்தது இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
This is what happened till now for Karunanithi at Kauvery hospital!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த வருடம் 2016 டிசம்பர் மாதம் நீர்ச்சத்து குறைவாக இருந்த நிலையில் முதன்முதலில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு  சளித்தொல்லையும், சுவாசக் கோளாறும் இருந்தது அறியப்பட்டு டிரக்கியோஸ்டோமி எனப்படும் தொண்டையில் துளையிடப்பட்டு சுவாசக் குழாயோடு செயற்கை குழாய் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார். இருப்பினும்,  உணவு எடுத்துக் கொள்வதில் பிரச்னை ஏற்பட்டதால், அவரது வயிற்றின் வலது மேற்பகுதியில் துளையிட்டு PEG (Percutaneous Endoscopic Gastrostomy) என்ற செயல்முறைப்படி குழாய் பொருத்தப்பட்டது. இதற்கு ’தோல்வழி இரைப்பை துளைப்புக் குழாய்’ என்று பெயர்.


அதன் பின்னர் 2018, கடந்த மாதம் ஜூலை 18 ஆம் தேதி ஸ்டாலின் லண்டனில் இருந்து திரும்பி வந்த பிறகு கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து ஜுலை 25 ஆம் தேதி கருணாநிதியின் இரத்த அழுத்தம் அதிகமானதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கருணாநிதி நரம்பியல் சிக்கல்களை சந்தித்து மீண்டதாக  நரம்பியல் நிபுணரான ராமமூர்த்தி காவேரி மருத்துவமனையில் இருந்து பேட்டியளித்தார்.

 

பின்னர் 28 ஆம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் காவேரி மருத்துவமனையில் வைத்து சிறுநீர் பாதைத் தொற்று நோய்க்குறிக்கான தீவிர சிகிச்சை கருணாநிதி அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கேதர்ஸ் எனப்படும் சிறுநீரகக் குழாய் பொருத்தப்பட்டது. கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டது. அந்த புகைப்படம் கருணாநிதியை பலரும் பார்த்திராத வண்ணம் இருந்ததை அடுத்து திமுக தொண்டர்கள் பலர் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இடையில் 30 நிமிடங்கள் எழுந்து உட்காரும் நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் சில நாழிகையிலேயே கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்தது.

 

குடியரசுத் தலைவர், ஆளுநர், புதுச்சேரி முதல்வர், இதர கட்சி அமைச்சர்கள்,  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், தமிழிசை சவுந்தர்ராஜன், ஜி.கே.வாசன், வைகோ , கி.வீரமணி, வைகோ, திருமாவளவன்,  ஈவிகேஎஸ் இளங்கோவன், நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் ஆண்டனி, அர்ஜூன் , வடிவேலு மற்றும் பலரும் கலைஞரின் குடும்பத்தினரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

 

இவ்வாறாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை அளித்து வந்த 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை மேலும் பின்னடைவை சந்தித்ததாக ஆகஸ்ட் 6ம் தேதி இரவு காவேரி மருத்துவமனையின் 6வது அறிக்கை வெளியானதை அடுத்து, கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். 

 

இதற்கிடையே சென்னை ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் என ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீசார் தயார் நிலையில் குவிந்தனர். சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்திய டிஜிபி, வெளியூரில் இருந்து போலீசாரை சென்னைக்கு வரச்சொல்லி உடனடி உத்தரவையும் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் 6 முக்கிய மாவட்டங்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகளும், சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகின.

 

அதேநேரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து, 20 நிமிடங்கள் பேசினார். இந்த சந்திப்பில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கவும்,5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரம் வழங்கவும் கோரியதாகத் தகவல்கள் வெளியாகின.

 

அதன் பின்னர் முதல்வர் பழனிசாமி டிஜிபியுடனும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடனும் ஆலோசனை நடத்திய பின்னர்தான் இன்று மாலை காவேரி மருத்துவமனையின் 7வது அறிக்கை வெளியாகியது. அந்த அறிக்கையில் ’திமுக தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். கடந்த சிலமணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. முடிந்தவரை சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் மோசமடைந்து வருகின்றன’என்று கூறபட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்து வீட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, கருணாநிதியின் மகள் செல்வி, துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்து இல்லத்துக்கு கதறி அழுதபடி சென்றனர். 

 

மேலும் காவேரி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை மீது கவலைகொண்டு ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்தனர். கருணாநிதி மீண்டும் வருவார் என நம்பிக்கையுடன் இருந்த பலரும், அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தாக வந்த காவேரி மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையை அறிந்ததும் மனம் விட்டு கதறி அழத் தொடங்கினர்.  சில திருநங்கைகளும், மூன்றாம் பாலினமான தங்களுக்கு முதன் முதலில் திருநங்கைகள் என்று பெயர் வைத்து அங்கீகரித்தவர் கலைஞர் என்று கூறி கதறி அழுதனர்.  மேலும் வெளியூர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக திமுக தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் நின்று ‘எழுந்து வா தலைவா.. எழுந்து வா உயிரே’ என்று அழுதபடி கோஷமிட்டனர். ’தமிழுக்காக வாழ்ந்த கலைஞர் மீண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தையும் தமிழினத்தையும் மீட்க முடியும்’, ‘அவருக்காக எங்கள் உயிரையே கொடுப்போம்’ என்றும் கூறினர்.

 

இறுதியில் ஆகஸ்ட் 07,2018ம் தேதி மாலை 6.10 மணிக்கு நீண்ட நெடும் போராட்டத்திற்கு பின்னர், 25 ஆண்டுகள் முதல்வராக, 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தனது 94 வயதில் சிகிச்சைப் பலனின்றி காவேரி மருத்துவமனையில் காலமானார்.