'எல்லோரும் புஜாரா ஆக முடியாது'.. ஆஸ்திரேலியாவை வம்புக்கிழுத்த இந்திய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 07, 2018 09:27 PM
#AusVsINd: Not everyone is Pujara says Rishab Pant

எல்லோரும் புஜாரா ஆகிட முடியாது என இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்தது குறித்து, சமூக வலைதளங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

 

எனினும் அந்த அணியின் கவாஜா தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 28 ரன்களை சேர்த்தார். முதல் ஓவரில் களமிறங்கிய அவர் 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.40-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை கவாஜா எதிர்கொள்ளும்போது பந்து கிளவுஸில்  உரசி ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ கேட்க, பின்னர் விக்கெட் கொடுக்கப்பட்டது.

 

கவாஜா கேட்ச் கொடுத்ததும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் , ‘‘இங்கே எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது’’ என்று ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப்பின் ஆஸ்திரேலியா எதிரணிகளை விரும்பும் வகையில் விளையாட வேண்டும் என்று, கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஸ்லெட்ஜிங்கை ரிஷப் பண்ட் இன்று தொடங்கி வைத்துள்ளார்.இதனால் வரும் நாட்களில் ஆஸ்திரேலிய அணியினரும் இதுபோன்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மறுபுறம் ரிஷப் இந்திய அணி வீரர்களையும் சேர்த்து தான் இப்படி சொல்லியிருக்கிறார் என, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் ரிஷப் பண்டின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.