'வருகிறார் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தடுப்பு சுவர்'...டிராவிட்டுக்கும்,இவருக்கும் என்ன ஒரு ஒற்றுமை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 06, 2018 04:40 PM
Pujara equals Rahul Dravid, completes 5000 Test runs

இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,டெஸ்ட் போட்டிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் புஜாரா.இந்நிலையில் டெஸ்டில் போட்டிகளில்  ரன் எடுப்பதில் டிராவிட்டும் புஜாராவும் ஒரே மாதிரியான சாதனயைப் படைத்துள்ளனர்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் தங்கள் விக்கெட்டை இழந்து சீட்டுக்கட்டை போல் சரிந்தார்கள்.ராகுல் 2, முரளி விஜய் 11, கோலி 3, ரஹானே 13 என சொற்ப ரன்னில் தங்கள் விக்கெடினை இழந்து நடையை கட்டினார்கள்.

 


ஆனால் மற்றோரு புறம் நிலைத்து நின்று ஆடிய புஜாரா,ரோகித் சர்மா 37, பண்ட் 25, அஸ்வின் 25 ஆகியோருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார்.இதனால் 246 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரி விளாசி 123 ரன்களை எடுத்து,ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் தொடரில் புஜாரா அடித்த 16வது சதம் ஆகும்.65வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் புஜாரா இதுவரை 3 முறை 200 ரன்கள், 16 சதம், 19 அரைசதம் அடித்து 5000 ரன்களை கடந்துள்ளார்.

 

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும்,டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தடுப்பு சுவர் என அழைக்கப்படும் வீரருமான ராகுல் டிராவிட் டெஸ்ட் தொடரில் 13288 ரன்களை குவித்தவர். புஜாராவும் சிறப்பாக விளையாடி இன்று 5000 ரன்களை கடந்துள்ளார். டிராவிட் மற்றும் புஜாரா 3000, 4000, 5000 ரன்களை ஒரே அளவு இன்னிங்ஸ் எட்டியுள்ளனர்.

 

இருவரும் 67 இன்னிங்ஸில் 3000 ரன்களும், 84 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்தவர்கள். இன்று புஜாரா 108 இன்னிங்ஸில் 5000 ரன்களை கடந்தார். இதே இன்னிங்ஸ் எண்ணிக்கையில் டிராவிட்டும் 5000 ரன்களை கடந்திருந்தார் என்பது,இருவருக்கும் இடையேயான பெரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் அடுத்த தடுப்பு சுவர் புஜாரா தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Tags : #CRICKET #BCCI #CHETESHWAR PUJARA #RAHUL DRAVID #INDIA VS AUSTRALIA