‘ஒரே ஒரு விக்கெட்தான்..மொத்த டீமும் க்ளோஸ்’.. ‘தல’ தோனியின் வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 04, 2019 11:30 AM

தோனி எடுத்த ஒரு விக்கெட் ஆட்டத்தையே மாற்றி அணியை வெற்றி பெறச் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Watch video: dhoni\'s stunning move to catch neesham\'s run out - viral

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4-1 என்கிற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூஸிலாந்து மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று நடைபெற்ற நியூஸிலாந்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா, தவான், என இருவரும் அடுதடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் இறங்கிய தோனி கை கொடுப்பார் என நம்பிய நிலையில் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் அம்பட்டி ராயுடு நிதானமாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்து அமர்க்களப்படுத்தினார். மொத்தம் அவர் 22 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி 45 ரன்களுக்கு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி நியூஸிலாந்து அணி விளையாட ஆரம்பித்தது. நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது நியூஸிலாந்து வீரர் நீஷம் திடீரென அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இவரது விக்கெட்டை எடுக்க இந்திய அணி திணறி வந்தது.

இந்நிலையில் கேதர் ஜாதவ் 37 -வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை நீஷம் எதிர்கொண்டார். அப்போது பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்புக்கு பின்னால் உருண்டோடியது. உடனே தோனி, ஜாதவ்,சஹால் உள்ளிட்ட அனைவரும் எல்.பி.டபுள்யூ கேட்டனர். ஆனால் நடுவர், அவுட் இல்லை என தலையசைத்தார். அதற்குள் தோனி ஸ்டெம்புக்கு பின்னால் இருந்த பந்தை எடுத்து ஸ்டெம்பில் எறிந்து நீஷமை அவுட் செய்தார். இதை நீஷமே எதிர்பார்த்திருக்கமாட்டார்.

நியூஸிலாந்து வீரர் நீஷமை அவுட் ஆக்கிவிட்டு தோனி சந்தோசத்தில் துள்ளிக் குதித்து ஓடினார். வழக்கமாக எவ்வளவு பெரிய விக்கெட்டை எடுத்தாலும் தோனி அமைதியாகவே தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். ஆனால் நீஷமின் விக்கெட்டைத் தோனி கைப்பற்றியதை அடுத்து 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூஸிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. யாருமே எதிர்பார்க்காத வகையில் தோனி எடுத்த நியூஸிலாந்து வீரர் நீஷமின் விக்கெட்டை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Tags : #MSDHONI #NZVIND #ICC #BCCI #ODI