'ஸ்மித், வார்னர் மீதான தடை'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 20, 2018 02:45 PM
Steve Smith,David Warner bans not reduced says Cricket Australia

பந்தைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக தடை விதிக்கப்பட்ட ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்க முடியாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.இந்திய,ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில்,இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில்,இதற்குக் காரணமாக இருந்தவர் வார்னர் என்றும் கேப்டன் ஸ்மித் தெரிந்தும் இதனைத் தடுக்க முயலவில்லை என்றும் விசாரணையின் முடிவில் தெரிய வந்தது.

 

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் எழுப்பியது.இதுதொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும் பான்கிராப்ட்டிற்கு 9 மாதங்களும்,அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

 

இந்த தடை ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை கடுமையாக பாதித்தது.ஸ்மித்தும்,வார்னரும் ஆஸ்திரேலிய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தார்கள்.இதனால் அவர்கள் இருவரும் இல்லாதது வருகின்ற உலகக்கோப்பை போட்டிகளை வெகுவாக பாதிக்கும் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.

 

இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் சங்கம்,வீரர்கள் இருவர் மீதான தடையினை நீக்க வேண்டும் என,அந்நாட்டு கிரிக்கெட் போர்டுக்குப் பரிந்துரை செய்தது.இந்நிலையில் இன்று கூடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு,ஸ்மித், வார்னர் ஆகியோரின் தண்டனையைக் குறைப்பது குறித்து தீவிரமான ஆலோசனை நடைபெற்றது.

 

ஆலோசனையின் முடிவில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு விதித்த தடையில் எந்த வித மாற்றமும் இல்லை எனவும்,இருவரும் முழு தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட்  தலைவர் எட்டிங்ஸ் தெரிவித்தார்.இந்த முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Tags : #CRICKET #AUSTRALIAN-BALL-TAMPERING-CONTROVERSY-2018 #DAVIDWARNER #STEVE SMITH #CRICKET AUSTRALIA