சரியாக '27 நாள்களுக்கு' பின் கண்டுபிடிக்கப்பட்ட 'இந்திய விமானி'யின் உடல்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 27, 2018 12:31 PM
Indonesia Plane Crash, body of Indian Pilot identified

இந்தோனேஷியா விமான விபத்தில் உயிரிழந்த இந்திய விமானியின் உடல், சரியாக 27 நாள்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த அக்டோபர் 29-ம் தேதி இந்தோனேஷிய தலைநகர் ஜனார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவிலிருந்து சுமார் 169 பயணிகளுடன் கிளம்பிய லயன் ஏர் விமானம் கிளம்பிய 13 நிமிடங்களில் மாயமானது. இதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்த 169 பேரும் உயிரிழந்தனர்.

 

உலகளவில் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த விமான விபத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டி மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கண்டறியப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது என்று, கருப்பு பெட்டியின் வழியாக கண்டறியப்பட்டது.தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது என்றும், இதனால் அந்த பணிகளை நிறுத்திக் கொள்வதாகவும் இந்தோனேஷியா தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவித்தது.

 

இந்த நிலையில் லயன் ஏர் விமானத்தை ஓட்டிச்சென்ற இந்திய விமானி பவ்ய சுனேஜாவின் உடல் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,'' லயன் ஏர் விமானத்தை இயக்கிய கேப்டன் பவ்ய சுனேஜாவின் உடல் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இன்று அவரின் உடல் இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

விமான விபத்து நடந்து சுமார் 27 நாள்களுக்குப் பின், விமானியின் உடல் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #FLIGHT #LIONAIRCRASH