'திருடவா வரீங்க'.. அரிவாளுடன் திருடர்களை துரத்திய பெண்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 01, 2019 11:20 AM
Coimbatore women chase robbers

கோவையில் திருடர்களை அரிவாளுடன் துரத்திய பெண்ணிற்கு,பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாச பிரபு.இவரும் இவரது மனைவி கவிதாவும் தங்களின் சொந்த ஊரான தாராபுரதிற்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் தம்பதிகள் வீட்டில் இல்லை என்பதை நன்கு அறிந்து கொண்ட கொள்ளையர்கள்,அதிகாலை 1 மணியளவில் பிரபுவின் வீட்டிற்கு பைக்கில் வந்திருக்கிறார்கள்.இதனையடுத்து வீட்டின் முன்பக்கக் கதவின் தாழ்பாளை உடைத்து வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.

 

இந்நிலையில் திடீரென நாய்கள் குலைக்க ஆரம்பித்ததால்,பிரபுவின் வீட்டின் அருகில் வசிக்கும் மலர்விழி என்பவர் இரவில் யானைகள் தான் வந்து விட்டதோ என எண்ணி,தனது வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவைப் பார்த்துள்ளார்.அப்போது  ஸ்ரீனிவாச பிரபு வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை கண்ட மலர்விழி சந்தேகத்தின் பேரில்  கவிதாவுக்கு செல்போனில் அழைத்துக் கேட்டுள்ளார்.அப்போது தாங்கள் வீட்டில் இல்லை என்றும்,என்னவென்று போய் பாருங்கள் என சொன்னதைத் தொடர்ந்து மலர்விழி, அவரது கணவருடன் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்  ஸ்ரீனிவாச பிரபு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

 

அப்போது வீட்டினுள் சத்தம் கேட்கவே,உடனே திருடன் என மலர்விழி சத்தம் போட ஆரம்பித்துள்ளார்.உடனே உஷாரான திருடர்கள் இருவரும் கம்பவுண்ட் சுவரைத் தாண்டி,அருகிலிருந்த சோளக்காடு வழியாகத் தப்பி ஓடினர்.இதைத்தொடர்ந்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. அவை சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் ஆகும்.

 

இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருடர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.திருடர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டிய  மலர்விழிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Tags : #ROBBERY #COIMBATORE