கஜா புயல் நிவாரணமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 19, 2018 09:17 PM
TamilNadu Govt Announces 1000 Cr for Gaja Cyclone Relief

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதோடு, முகாமில் தங்கியிருந்த குடும்பங்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000, முழுதும் சேதமடைந்த குடிசை வீட்டிற்கு ரு.10000, பாதி  சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100, பாத்திரங்கள் வாங்க கூடுதலாக ரூ.3800 என்கிற விகிதத்தில் நிதிக்களை அறிவித்துள்ளார்.

 

 

உயிரிழந்த பசு மற்றும் எருமைகளுக்கு தலா 10 ஆயிரமும் காளை மாடுகளுக்கு 25 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர், சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42000 வழங்கப்படும் என்றும், முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்குள் ரூ.85000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 

மேலும் நெல் பயிர் சேதத்திற்காக ஒரு ஹெக்டருக்கு நிவாரணமாக 13, 500 ரூபாய் வழங்கப்படும், புயலால் வீழ்ந்த தென்னை மரம் ஒன்றிற்கு வெட்டி அகற்றும் செலவையும் சேர்த்து 1,100 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

175 மரங்கள் உள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1.92 லட்சம் நிவாரணம். மறு சாகுபடிக்கு 72000 ரூபாயும், தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2.64 லட்சம் மற்றும் சொட்டு நீர் பாசன சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.