முன்பகையா?...கட்சி பிரச்சனையா?...ரஜினி ரசிகர் தாக்குதல் குறித்த பின்னணி தகவல்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 13, 2019 12:49 PM

சேலம் மாவட்டம் கருக்கல்வாடி பகுதியில் ரஜினி ரசிகரான ரஜினி பழனி என்பவரை நேற்று காலை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டி விரட்டி வெட்டிக்கொல்ல முயன்றுள்ளது.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder attempt on Rajini fan Palani in Salem

ரஜினியின் தீவிர ரசிகரான பழனி,தனது பெயரை ரஜினி பழனி மாற்றிக்கொண்டார்.இவர் சேலம் அழகாபுரம் பகுதியில் கால் டாக்ஸி ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில்,ரஜினி பழனி அழகாபுரம் பகுதியில் தனது கால் டாக்ஸியை எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பழனியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஜினி பழனியை மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனிடையே வெட்டுப்பட்ட பின்பு தன்னுடைய செல்போனில் ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ எடுத்த அவர் 'தன்னை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தான் தாக்கியதாக' தெரிவித்துள்ளார்.மேலும் அதனை படம் பிடித்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.அந்த வீடியோவை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த ரஜினி பழனி,ஏற்கனவே வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியை கடுமையாக வசைபாடி வந்திருக்கிறார்.இதனால் இரு கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கும்,ரஜினி பழனிக்கும் வார்த்தை மோதல் இருந்து வந்துள்ளது.

இதனிடையே சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகி அருள் ராம் கூறுகையில் ''எங்களுக்கும் நடந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.ரஜினி பழனியை தாக்கியவர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல.அவர் கூறும் பெயரில் எங்கள் கட்சியில் யாரும் உறுப்பினராக இல்லை.தேர்தல் நெருங்கும் நிலையில் எங்கள் கட்சியின் மீது அவப்பெயர் சுமத்த நிகழ்த்தபடும் சதிதான் இது'' என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  ரஜினி பழனி மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags : #RAJINIKANTH #SUPERSTAR #ATTACKED #RAJINI FAN #RAJINI PALANI