மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுமாப்பிள்ளை கதிரவன்..சிகிச்சை பலனின்றி பலி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 16, 2018 12:02 PM
Chennai Engineer dies after attacked by wife\'s lover

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுமாப்பிள்ளை கதிரவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

 

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் சில நாட்களுக்கு முன் கதிரவன்(27) என்ற புது மணமகன் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தபோது அவரின் மனைவி அனிதா(25) தான் இதற்கு தனது காதலன் மூலம் ஸ்கெட்ச் போட்டவர் என்ற விவரம் போலீசாருக்குத் தெரியவந்தது.

 

இதைத்தொடர்ந்து போலீசாரிடம் அனிதா சமீபத்தில் வாக்குமூலம் அளித்தார். அதில் ,''நானும் அந்தோணி(25) என்பவரும் கல்லூரி படிக்கும்போதே காதலித்தோம். ஆனால் எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.என்னால் அந்தோணியை மறக்க முடியவில்லை. இதனால் நானும், அந்தோணியும் சேர்ந்து வாழ திட்டம் போட்டோம். அப்போது நான் இணையத்தில் சென்னையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கடற்கரை எதுவென்று தேடி, திருவான்மியூர் கடற்கரை பகுதியைத் தேர்வு செய்தேன்.

 

திருமணம் ஆனபின்னால் நான் கதிரவனிடம் சரியாக பேசவில்லை. அதனால் அவர் என்மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். அன்று கடற்கரைக்கு சென்றபோது நான் மனம்விட்டு பேசினேன்.தொடர்ந்து இருவரும் கண்ணாமூச்சி விளையாடினோம்.

 

அப்போது நான் அந்தோணிக்கு மெசேஜ் அனுப்பினேன். இதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த அந்தோணி அங்குவந்து கதிரவனை இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு நகை,செல்போன்களைப் பறித்துக்கொண்டு சென்றார். நானும் கொள்ளையர்கள் தாக்கியது போல நடித்தேன்.ஆனால் என்னுடைய நடவடிக்கைகள் காரணமாக நான் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன்,'' என தெரிவித்தார்.

 

சம்பவ இடத்தின் அருகேயிருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து அந்தோணி ஜெகனைக் கண்டறிந்த போலீசார், அவரிடம் இருந்த அனிதாவின் செல்போன் சிக்னலை வைத்து மதுரை சென்று அவரைக் கைது செய்தனர்.

 

இந்தநிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அனிதா, அந்தோணி இருவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #MURDER #CHENNAI #ANITHA