'வரதட்சணை கேட்கறாங்க' பெற்றோர் மீது இளைஞர் புகார்..போலீஸ் செஞ்சத பாருங்க!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 13, 2018 12:37 PM
Bangalore Youth complaint against parents in Dowry Case

வரதட்சணை கேட்டு தனது திருமணத்தை நிறுத்தியதாக இளைஞர் ஒருவர் தனது பெற்றோருக்கு எதிராக புகார் கொடுக்க, இதனைக்கேட்ட போலீசார் தங்களது சொந்த செலவிலேயே திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

 

தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜண்ணா(வயது 27). இவருக்கும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா ஜோதிகவுடனபுரம் பகுதியை சேர்ந்த அம்பிகா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் வரதட்சணையாக ராஜண்ணாவின் பெற்றோர் கேட்ட பணத்தை கொடுக்க முடியாததால், ராஜண்ணா-அம்பிகா திருமணம் நின்று போனது. இதற்கிடையில் செல்போனில் பேசி ராஜண்ணா-அம்பிகா இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

 

தனது பெற்றோரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வதற்கு ஒப்புக் கொள்ளாததால், வேறு வழியின்றி பெங்களூர் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் ராஜண்ணா தனது பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

 

புகாரைக் கேட்ட சாம்ராஜ் நகர் போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ராஜண்ணாவின் பெற்றோர் வரதட்சணை விஷயத்தில் கறாராக இருந்துள்ளனர். இதனையடுத்து அங்கு வேலை செய்து வரும் போலீசார் அனைவரும் தங்களால் முடிந்த தொகையை ஒன்று திரட்டி சுமார் 40 ஆயிரம் ரூபாயை ராஜண்ணாவின் பெற்றோரிடம் அளித்தனர்.

 

மேலும் மீதமுள்ள சுமார் 1.60 லட்சம் ரூபாயை, அம்பிகாவின் பெற்றோரிடம் வாங்கித் தருவதாகவும் போலீசார் ராஜண்ணாவின் பெற்றோரிடம் வாக்குறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி ராஜண்ணா-அம்பிகா திருமணம் சாம்ராஜ் நகர் காவல் நிலையத்திலேயே நடைபெற்றுள்ளது.

 

போலீசாரின் இந்த மனிதாபிமான செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Tags : #POLICE #BANGALORE #MARRIAGE