‘பச்சப்புள்ளக்கிட்ட பாதுகாப்பு நடவடிக்கை’.. சட்டையை கழட்டியபின் அனுமதித்த காவலர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 30, 2019 04:12 PM

அஸ்ஸாம் மாநிலத்தில் 3 வயது குழந்தையின் கருப்பு நிற ஆடையை, விழாவின் வாசலிலேயே நின்று கழட்டச்சொல்லி குழந்தையின் அம்மாவுக்கு பாதுகாப்பு காவலர்கள் அறிவுறுத்திய பின் குழந்தையின் தாய்,  குழந்தையின் ஆடையை கழட்டிவிட்டு நிகழ்ச்சிக்குள் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

toddler was forced to open his black sweater for security reason

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக அஸ்ஸாம் மாநில பொதுமக்கள் பலர் அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், கருப்பு ஆடைகள் அணிந்தபடியும், கருப்பு கொடி காட்டியபடியும் குடியரசு தினத்தன்று கண்டனத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த விஷயத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், கவன ஈர்ப்புப் பேரணியும் அம்மாநிலத்தால் தடைசெய்யப்பட்டதோடு, இவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.  இதனை அதிகாரப்பூர்வ உத்தரவாக அரசு பிறப்பிக்காத நிலையிலும் காவல்துறையினர் தனிப்பட்ட முறையில் கவனித்து அறிவுறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், குடியரசு தினத்தன்று அஸ்ஸாம் மாநில முதலமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான சர்பானந்தா சோனோவல், அஸ்ஸாமின் போர்காங் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கு தனது குழந்தையுடன் வந்த பெண்மணி, பாதுகாப்பு பிரிவு போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த பெண்மணியின் 3 வயது குழந்தை கருப்பு நிற ஸ்வெட்டர் ஜாக்கெட் போன்ற ஆடையை அணிந்துள்ளதாகவும், அது அந்தச் சூழலில் தேசவிரோதமாக கருதப்படும் என்றும், அதை கழட்டிய பிறகே உள்ளே அனுமதிக்க முடியும் என்றும் காவலர்கள் மிகவும் ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, அந்த பெண்மணி விழாக் கூட்டத்தின் வாயிலில் அமர்ந்தபடி போலீஸாரின் முன்னிலையில், தனது 3  வயது மகனுக்கு  அணிவித்திருந்த கருப்பு நிற ஸ்வெட்டர் ஜாக்கெட்டினை கஷ்டப்பட்டு கழட்டினார். அதன் பிறகு குழந்தை கதறி அழத் தொடங்கிய காட்சி அனைவரின் நெஞ்சையும் உருகச் செய்துவிட்டது. போலீஸாரின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகே, அந்த பெண்மணிக்கு தன் குழந்தையுடன் விழாக் கூட்டத்துக்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாகியதோடு, பலரின் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

Tags : #BORGANG #TODDLER #SARBANANDA SONOWAL #ASSAM #VIRALVIDEOS