கைதாகிறாரா மேத்யூஸ்?..‘அப்படி என்னதான் இருக்கு அந்த வீடியோவுல?’

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 13, 2019 04:02 PM

தெஹெல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அந்த ஆவணப்படம் தொடர்பான அடுத்தடுத்த செய்திகளும் அரசியலாளர்களின் கருத்துக்களும் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன. சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்படத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த தொடர்கொலைக்கு முதல்வர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tehelka journalist mathews documentary about Kodanad estate goes viral

ஏறக்குறைய 16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி கொடநாடு பங்களாவின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் மர்மமாக கொல்லப்பட்டது, பங்களாவில் இருந்த உயர்ரக கடிகாரங்கள் மற்றும் கிரிஸ்டல் பேப்பர் வெயிட் காணாமல் போனது பின்னர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ், (சயன் என்பவரின் மனைவி) வினுப்ரியா மற்றும் (சயன்-வினுப்பிரியா தம்பதியரின்) குழந்தை நீத்து உள்ளிட்டோர் விபத்தில் இறந்தது, சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ்குமாரின் மரணம் என பல தகவல்களை தன் வாக்குமூலத்தில் கூறியுள்ள சயன், மேலும் இவை அனைத்தும் ஜெயலலிதாவின் பணம், சொத்துக்கள், ஆவணங்களுக்காக நடந்ததாகவும், அந்த ஆவணங்களை கேரளாவைச் சேர்ந்தவர்களின் மூலம் எடுப்பதற்காக திட்டமிடப்பட்டதாகவும் சயன் வீடியோ பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் தொடர்புடைய கனகராஜ், ஜம்ஷீர், மனோஜ், சயன் ஆகிய நால்வரும் கொடநாடு பங்களாவுக்கு சென்றதாகவும் இவர்களில் ஜம்ஷீர் என்பவருக்கு மட்டுமே எதற்குச் செல்கிறோம் என்று தெரியாமல் இருந்ததாகவும், அங்குள்ள 28 சிசிடிவி கேமராக்களும் இயங்காத நிலையில் இந்த திருட்டு நடந்துள்ளதாகவும், இவற்றை எல்லாம் அறிந்த தினேஷ் குமார் மரணமடைந்ததாகவும் இந்த ஆவணப்படம் கூறுகிறது.

இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வெளியான இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள மேத்யூஸ் சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்த வீடியோ குறித்த கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் மறுத்துள்ளதோடு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, அதிமுக ஆட்சி மீது களங்கம் விளைவிப்பதற்காக சுமத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் இவை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : #AIADMK #EDAPPADIKPALANISWAMI #JAYALALITHAA #DOCUMENTORY #VIRAL #KODANADESTATE #METHEWS #KODANADMURDER