‘அம்மாவும் இதை நம்புனாங்க’.. தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த மகன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 27, 2018 10:17 PM
kolkata man lives with mother\'s corpse for 18 days mystery revealed

கொல்கத்தாவில் நபர் ஒருவர் இறந்து போன தனது தாயின் உடலை 18 நாட்களாக வீட்டில் வைத்திருந்ததற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர்  நடந்த விசாரணையில் வெளியாகிய பல திடுக்கிடும் தகவல்கள் கொல்கத்தா மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

 

முன்னதாக கொல்கத்தா சி.ஐ.டி அலுவலகத்தை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சால்ட் லேக் பகுதியைச் சேர்ந்த தனது  நண்பரான மைத்ரேய பட்டாச்சார்யா என்பவர், இறந்து போன அவரது தாயை 18 நாள்களாக வீட்டில் வைத்துள்ளதாகவும், அந்த உடலை அடுத்த இரு நாட்களில் புதைக்கவுள்ளதாகவும் அதற்காக தன்னை உதவிக்கு அழைப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு விரைந்துள்ளனர். பாழடைந்த அவ்வீட்டில் ஒரு வயதான பெண்மணி இறந்து கிடந்துள்ளார். பின்னர் அந்த பெண்மணியின் மகனும் அந்த வீட்டில்  இருந்தவருமான  மைத்ரேய பட்டாசார்யாவை காவல்துறையினர் பிடித்து விசாரிக்கையில் மேலும் சில வியப்பூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.


கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேய பட்டாச்சார்யாவின் தந்தை தீ விபத்தில் இறந்துபோன பிறகு அவரது நினைவாக வீட்டை புதுப்பிக்காமல், பாழடைந்த அந்த வீட்டில் மைத்ரேய பட்டாச்சார்யாவும் அவரது தாயும் இருந்துள்ளனர். இந்த நிலையில் 18 நாட்களுக்கு முன்பு, அவரது தாய் கிருஷ்ண பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால், மருத்துவம் செய்யக்கூட பணமில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். ஆனால் தன் தாய் இறந்ததும் வீட்டில் உள்ள அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு இறந்துபோன தாயுடன் தனியாக இருந்துள்ளார் மைத்ரேய பட்டாச்சார்யா.


கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பின்பு அதீத கடவுள் நம்பிக்கை காரணமாக, இறந்து போன ஒருவரை 21 நாட்கள் கழித்து சரியான மங்களகரமான நேரத்தில் புதைக்க வேண்டும் என்று மைத்ரேய பட்டாச்சார்யாவின் தந்தை கூறியதை நம்பி, அவர் இவ்வாறு இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியரான தன் அம்மாவுக்கும் இந்த விஷயத்தில் நம்பிக்கை இருந்ததாக கூறியுள்ள மைத்ரேய பட்டாச்சார்யா தன் தாயை முற்றத்தில் புதைக்க எண்ணி தன் நண்பருக்கு தொடர்பு கொண்டபோது, அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார். 

 

முதலில் கஷ்டமாக இருந்தாலும், பின்னர் தாயின் சடலத்துடன் வாழ பழகிக் கொண்டதாகக் கூறிய மைத்ரேய பட்டாச்சார்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #MOTHER #SON #DEADLY #MAN #CORPSE #MYSTERY #VIRAL