நியூஸிலாந்து வீரரை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த ‘ஹிட்மேன்’!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 08, 2019 06:52 PM

நியூஸிலாந்துக்கு எதிரான 2 -வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Rohit sharma creates a world record in t20 cricket

இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் 4-1 என்கிற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

இதனை அடுத்து  நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 2 -வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 20 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது. இதில் ரோஹித் ஷர்மா 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் இளம் வீரரான ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டினார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2 -வது டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா 35 ரன்களை கடந்த போது, நியூஸிலாந்து பேட்ஸ்மேன் மார்டின் கப்திலின் சாதனையை முறியடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் அடித்து, நியூஸிலாந்து வீரர் மார்டின்(2272) முதல் இடத்தில் இருந்து வந்தார்.

தற்போது இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா 2,279 ரன்கள் எடுத்து சர்வதேச டி20  போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

Tags : #TEAMINDIA #NZVIND #ICC #BCCI #T20 #ROHITSHARMA