உலகக் கோப்பை மகளிர் டி20:"பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி"...அதிரடி காட்டிய கேப்டன்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 12, 2018 12:19 PM
ICC Women\'s World T20: India beat Pakistan by 7 wickets

பாகிஸ்தான் அணியுடனான டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில்,இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

 

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.இதில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி அதிரடியான வெற்றியை பெற்றது.இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ்  பவுலிங் செய்ய தீர்மானித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஆயிஷா ஸாபர், கேப்டன் ஜாவேரியா கான் களமிறங்கினர்.

 

தொடக்கமே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.அருந்ததி ரெட்டியின் அபாரமான பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி ஆயிஷா ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஓமைமா சோஹைல் 3 ரன்களுடனும், கேப்டன் ஜாவேரியா 17 ரன்களும் எடுத்த நிலையில் ரன் அவுட்டாயினர்.தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்ததால் பாகிஸ்தான் தடுமாறி கொண்டிருந்தது.இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிஸ்மா மற்றும் நிடா ஜோடி ஓரளவுக்கு நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருப்பினும் பிஸ்மா 54 ரன்களிலும், நிடா 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

இதனால் மீண்டும் பாகிஸ்தான் சரிவை நோக்கி சென்றது.இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 133 ரன்கள் எடுத்தது.இந்திய தரப்பில் ஹேமலதா, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடினார்கள்.

 

இதில் மந்தானா 26 ரன்களுடனும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.நிலைத்து நின்று விளையாடிய மிதாலி ராஜ்  7 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 56 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கெளர் 14, வேதா கிருஷ்ணமூர்த்தி 8 ரன்களுடனும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்கள்.

 

இதன் மூலம் இந்திய மகளிர் அணி,அசத்தலான 2வது வெற்றியை பதிவு செய்தது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் மிதாலி ராஜ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.