'கிட்னி இல்லை என்றால் திருமணமும் இல்லை'.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 27, 2019 12:00 PM

ஒரு கிட்னி இல்லை என்கிற காரணத்தைச் சொல்லி தன் காதலன் தன்னை திருமணம் செய்யவில்லை என்று, காதலனின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,  சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில்  இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

groom refused to marry the bride after she lost her kidney - bizarre

சென்னையைச் சேர்ந்த நதியா என்கிற இளம்பெண்ணிற்கு கடந்த 2016-ஆம் வருடம் வாட்ஸ்ஆப்பில் ஒரு முன் பின் தெரியாத நம்பரில் இருந்து Hi என மெசேஜ் வந்ததை அடுத்து, அந்த வாட்ஸ்ஆப் நம்பரை உடனடியாக நதியா பிளாக் செய்துள்ளார். ஆனாலும் அதன் பிறகு வெவ்வேறு நம்பர்களிலிருந்து இதுபோன்ற மெசேஜ்கள் தொடர்ந்தன. இதனால் டென்ஷனான நதியா அவற்றுள் ஏதோ ஒரு நம்பருக்கு ரிப்ளை செய்துள்ளார்.

அதன் பிறகுதான் அந்த நம்பர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் விக்கி என்பது தெரியவந்தது. பின்னர் நதியாவும் விக்கியும் ஒருவர் மாற்றி ஒருவர் மெசேஜ் அனுப்பி இருவரும் வாட்ஸ்ஆப் உதவியாலேயே நண்பர்களாக பயணிக்க ஆரம்பித்தனர்.  பின்னர் அது காதலாக மாறி, கல்யாணத்தில் வந்து நின்றது. எனினும் இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. விக்கியின் அண்ணனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகு நதியா-விக்கியின் திருமணத்தை 2019-ஆம் ஆண்டு தை மாதம் நடத்தலாம் என்று விக்கியின் குடும்பத்தார் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் நதியா,  ‘தன் உடலை ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது அதில், தனக்கு ஒரு கிட்னி மட்டுமே இருப்பது தெரியவந்ததாக’ விக்கியிடம் திடீரென சொல்லியிருக்கிறார். அதற்கு விக்கி, ‘அதனால் என்ன எனக்கு கூடத்தான் காலில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது’ என்று ஆறுதல் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது நதியாவுடனான திருமணத்திற்கு விக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நதியாவை திருமணம் செய்ய வேண்டும் எனில், விக்கியின் குடும்பத்துக்கு நதியா வரதட்சணையாக 20 சவரன் நகை, 1 லட்சம் மதிக்கத்தக்க பைக் கொடுக்க வேண்டும் என்பதோடு, இந்த தகவலை முன்னரே சொல்லாமல் மறைத்ததாக நதியா மீது குற்றம் சாட்டிய விக்கியின் குடும்பத்தினர், உடனடியாக நதியா இன்னொரு கிட்னியையும் பெற்று உடல் நலம் தேர்ந்தாக வேண்டும் என்கிற நிபந்தனையை முன்வைத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த நதியா இதுகுறித்து போலீஸாரில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகம், உடனடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

Tags : #BRIDE #GROOM #CHENNAI #MARRIAGE #KIDNEY #BIZARRE