அழகுநிலைய அடிதடி: ’திமுக’ உறுப்பினர் மீது ஸ்டாலின் நடவடிக்கை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 13, 2018 02:36 PM
MKStalin dismisses DMK member for attacking woman at beauty parlour

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு செல்லும் வழியில் இருந்தது அந்த அழகு நிலையம்.  35 வயது மதிக்கத்தக்க சத்தியா இதனை நடத்தி வந்தார். இவருக்கும் 50  வயது மதிக்கத்தக்க செல்வகுமார் என்கிற திமுக முன்னாள் கவுன்சிலருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தால் முன்விரோதம் இருந்துள்ளது.

 

பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார்கடந்த 4 மாதத்திற்கு முன்பு,  சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கியுள்ளது தற்போது சிசிடிவி வீடியோ காட்சி  வாட்ஸ் ஆப் மற்றும் தொலைக்காட்சி மூலம்  வைரல் ஆகி வருகிறது. இதற்கு முன்னாள் திமுக உறுப்பினர் ஒருவர், பிரியாணி கடையில் புகுந்து அடித்த சம்பவத்துடன் ஒப்பிட்டு கூறப்படும் இச்சம்பவம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள மயூரி அழகு நிலையத்தில் நடந்துள்ளது.

 

பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட என்ன காரணமாக இருந்தாலும், சமூகத்தில் தனித்து பணிபுரிந்து வரும் பெண்ணிற்கு நேரும் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை நீடித்தால் இது பெண்களுக்கான சமூகமே இல்லை என்று சமூக வலைதளங்களில் ஆர்வலர்கள் சிலர் காட்டமாக விமர்சித்தும் வருகின்றனர்.  இந்நிலையில் இவ்விஷயத்தில் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து, திமுக தலைமையின் சார்பில் முன்னாள் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Tags : #MKSTALIN #DMK #VIRALVIDEO #WOMEN #BEAUTYPARLOUR #FORMERDMKCOUNCILOR