கூட்டணியை ஸ்டாலினின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.. தமிழக காங்., தலைவர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 29, 2018 12:06 PM
Stalin\'s words confirm chances of coalition - TN Congress leader

திமுகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நிகழ்ந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில்  உரை ஆற்றினார். அப்போது நடப்பு மத்திய மற்றும் மாநில ஆட்சிகளை நேரடியாக சாடினார். அதனை அடுத்து அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய வாழ்த்துக்களைக் கூறினார்.

 

அந்த பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் எப்போதும் இருப்பதை திமுகவின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கிறேன்’ என்று கூறினார்.  மேலும் ’திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றிய பலரது பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், சர்ச்சைகள் குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மு.க.ஸ்டாலினின் இந்த உரை அமைந்துள்ளது’ என்றும் கூறியுள்ளார்.

 

முன்னதாக திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் கலைஞர் ஆட்சி அமைத்திருந்தார். எனினும் ஈழ விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டினாலேயே இந்த கூட்டணி விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்டாலினின் உரை காங்கிரசுடனான கூட்டணியை உறுதிப்படுத்துவதாக கூறியுள்ள திருநாவுக்கரசரின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், மையக்குழுவை அமைத்து ராகுல்காந்தி தயாராகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.