’திமுக தலைவர்’ மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 28, 2018 11:08 AM
MK Stalin Becomes DMK Supremo

பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தின் வேர் கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். அறிஞர் அண்ணாவால் நீரூற்றி வளர்க்கப்பட்ட திமுக பின்னாளில் கலைஞரிடம் கைமாறியது. அதன் பின்னர் கடந்த வாரம் வரையிலும் அவர்தான் திமுக தலைவர். அவரது மறைவுக்கு பின் திமுகவின் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைவராகிறார். துரைமுருகன் பொருளாளராகிறார்.

 

ஆனாலும் மு.க.ஸ்டாலின், அழகிரியிடையே பனிப்போர் நிலவிதான் வருகிறது. அதே சமயத்தில் ‘இது எனது தலைமையில் நிகழும் பொதுக்குழு’ என்று இன்றைய பொதுக்குழு பற்றி மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தந்தை கருணாநிதியுடன் பல ஆண்டுகள் மகனாக மட்டும் ஸ்டாலின் இருந்திருந்ததால் அவர் இப்போது திமுக தலைவர் பதவியை ஏற்கவில்லை என்பதற்கான சிலவும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.


1968ல் இளைஞர் மன்ற தலைவராகவும், 1971ல் மாவட்ட பிரதிநிதியாகவும்,  1973ல் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர், 1976ல் எமர்ஜென்சி காலத்தில் மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையும் சென்றார்.  மேலும் 1982ல் இளைஞரணி அமைப்பு செயலர், 1989ல் சட்டமன்ற உறுப்பினர், 1996ல் மேயர், 2003ல் துணைப் பொதுச் செயலாளர், 2006ல் அமைச்சர், 2008ல் பொருளாளர், 2009ல் துணை முதல்வர், 2016ல் எதிர்க்கட்சி தலைவர், 2017ல் செயல் தலைவர் என தற்போது 2018ல் திமுக தலைவர் என்கிற இடத்தை படிப்படியாகவே அடைந்திருக்கிறார்.

 

இறுதி நிமிடத்தில் ஒரு மகனாக தன் தந்தைக்கு ஆற்றும் கடமையாக போராடி கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க முயன்று, அதில் வெற்றி கண்டவுடனேயே ராஜாஜி அரங்கத்தில் நின்று அழுதது அனைவரையுமே உருக்கியது. 

 

இந்நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டம் நிகழ்ந்த அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கிற்கு வருவதற்கு, முன்பு கலைஞர், அண்ணா நினைவிடத்துக்கு சென்றும் வணங்கிவிட்டு வந்த மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். இதனை அடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று, அன்பில் பொய்யாமொழிக்கு இன்று நினைவுநாள் என்பதால் அஞ்சலி செலுத்தினார்.

 

பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் என மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளை என்றுமே பின்பற்றும் மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக ஒரு மனதாக  அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு கட்சியினர், அரசியலாளர்களும், தம் கட்சி-மற்ற கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.