‘குடிநீரில் தவளை.. சட்னியில் எலி’.. போராடும் பொறியியல் மாணவர்கள்..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 28, 2019 07:18 PM

சென்னை செம்மஞ்சேரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விடுதி உணவு சரியில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Strike-TN College Students found frogs, rabbits in hostel food & water

ஆயிரக்கணக்கானோர் பயிலும் தனியார் பொறியியல் கல்லூரியின் விடுதி ஒன்றில் சுமார் 300 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள உணவு விடுதியில் குடிதண்ணீர் முழுக்க தவளைகளும், விடுதி மெஸ்ஸின் உணவில் எலியும் இருப்பது, அங்குள்ள மாணவர்களால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

உணவு விடுதியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்கின் ஃபில்ட்டரில் இருந்து சிறிய தேரைகளும் தவளைகளும் மாணவர்கள் தண்ணீர் பிடித்து குடிக்கும் குடிநீர் டேங்கின் வழியே வெளிவந்தது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அதிர்ந்துபோன மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துவதற்காக வீடியோக்களை எடுத்துள்ளனர். இதேபோல் அங்குள்ள ஹாஸ்டல் மெஸ்ஸில் தயாரிக்கப்பட்ட சட்னியில் எலி உலவிக்கொண்டிருப்பதையும் வீடியோக்களாக பதிவு செய்துள்ளனர்.

ஆபத்து நிறைந்த, சுகாதாரமற்ற, தரமற்ற இந்த போக்கினை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கடந்த செமஸ்டரிலேயே  கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அதற்குள் செமஸ்டர் விடுமுறை வந்ததால், தற்போது மீண்டும் இந்த பிரச்சனைகளை பேச மாணவர்கள் முற்பட்டுள்ளனர். அதற்கு செவிசாய்க்காத நிர்வாகத்தினரை கண்டித்து அனைத்து மாணவர்களும் காலைமுதல் மதியம்வரை கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் விரைவில் சரிசெய்துவிடுவதாகக் கூறி கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக கூட்டத்தை கலைத்துள்ளது. கல்லூரி நிர்வாகமும், விடுதி நிர்வாகமும் ஒன்றுதான் என்று சொல்லும் இந்த மாணவர்களில் ஆண், பெண் இருபாலரும் உள்ளனர். விடுதி மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு வீட்டில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களும் ஒத்துழைப்பு தந்துள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் சொன்னபடி காலம் தாழ்த்தாமல் இந்த பிரச்சனைகளை சரிசெய்து மாணவர்களின் பாதுகாப்புக்கும் சுகாதாரத்துக்கும் வழிவகை செய்யவில்லை என்றால் போராட்டம் மீண்டும் தீவிரமாகலாம் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : #COLLEGESTUDENTS #STUDENTS #STRIKE #CHENNAI #ENGINEERNG COLLEGE #BIZARRE #FOOD #HOSTEL #UNHEALTHY