சவுதி இளவரசருக்கு 'பரிசாக' அளிக்கப்பட்ட ஜமாலின் 'விரல்கள்'.. எதற்காக தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 25, 2018 12:07 PM
Journalist jamal khashoggi fingers were taken back to Saudi Arabia

பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சவுதி அரசரையும், இளவரசர் முகமது பின் சுல்தானையும் தொடர்ந்து விமர்சனம் செய்து எழுதிவந்த பத்திரிகையாளர் ஜமால் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி விவாகரத்து தொடர்பான ஆவணங்களைப் பெற, சவுதி தூதரகத்துக்குள் சென்றார். துருக்கியில் உள்ள தனது காதலியை திருமணம் செய்யும் பொருட்டு அவர் துருக்கி நாட்டில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றார்.மீண்டும் அக்டோபர் 2-ம் தேதி வருமாறு அவரிடம் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஜமால் அதற்குப்பின் மீண்டும் வெளியில் வரவில்லை. இது உலக அரங்கில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சவுதிக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. இதைத்தொடர்ந்து ஜமால் கொலை செய்யப்பட்டதாக துருக்கி அரசு செய்தி வெளியிட, சவுதி அரசு அதனை ஒப்புக்கொண்டது. ரியாத்தில் இருந்து 15 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் ஒன்று இஸ்தான்புல்லுக்கு சென்று அவரைத் துண்டு,துண்டாக வெட்டிக் கொலை செய்த உண்மையும் வெளியாகி உலக அரங்கை அதிர வைத்தது.

 

இந்த உண்மைகளை தொடர்ந்து தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது.

 

கொல்லப்பட்ட ஜமாலின் விரல்களைத் துண்டாக வெட்டி எடுத்துச்சென்று, சவுதி இளவரசருக்குப் பரிசாக அளித்த கொடுமை தான் அது. இளவரசரைப் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து எழுதியதால், ஜமாலின் விரல்களை எடுத்துச்சென்று அவருக்குப் பரிசாக அளித்துள்ளனர்.

 

முன்னதாக ஜமாலின் உடல் துண்டு,துண்டாக வெட்டப்பட்டு காடுகளில் வீசப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு கிணற்றில் இருந்து அவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம் குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம் என, துருக்கி அதிபர் எண்டோகன் தெரிவித்துள்ளார்.

 

இந்த கொலை விவகாரத்தில் சவுதி இளவரசரை அமெரிக்கா நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளது. `ஜமால் கொலையில் ஈடுபட்ட 18 முதல் 21 பேருக்கு அமெரிக்க விசா இனி வழங்கப்படமாட்டாது' என்று டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

 

இதனைத்தொடர்ந்து ஜமாலின் மகன் சலா கஷோகியை சவுதி மன்னரும் இளவரசர் முகமது பின் சல்மானும் நேரடியாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது தனது தந்தை மரணத்துக்குக் காரணமான இளவரசருக்கு சலா கைகொடுக்க மறுத்துள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக அவரை இளவரசருக்குக் கைகொடுக்க வைத்து, அதனை புகைப்படம் எடுத்து சவுதி அரசு வெளியிட்டுள்ளது.

 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஜமால் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்  என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பேசியிருப்பது தான்.

Tags : #MURDER #SAUDIARABIA #AMERICA #JAMALKHASHOGGI