‘சசிகலாவின் பேட்டி ஒரு ‘செட்-அப்’ என்றார்கள்.. உண்மையில் நடந்தது இதுதான்’.. செய்தியாளர் குணசேகரன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 22, 2019 06:10 PM

மிகக்குறுகிய காலத்தில் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை எட்டிய நியூஸ்18 தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சசிகலாவை பேட்டி எடுத்த பரபரப்பான அனுபவத்தை பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் பேட்டி பதிவின் ஒரு அங்கமாக பகிர்ந்துள்ளார்.

Journalist Gunasekaran Reveals what happened in sasikala interview

இதில் அவர் பேசியதாவது:

ஓ.பன்னீர் செல்வம் மெரினாவில் தியானம் செய்த பரபரப்பான சூழல்தான் அது. அப்போதுதான் எங்கள் சேனல் தொடங்கி ஒரு வருடம் ஆகியிருந்த நிலையில் அவர் வீட்டுக்கு சென்று பிரத்யேக பேட்டி ஒன்றை எடுத்தோம்.  அதில் அவருக்கும் சசிகலாவுக்கும், அவருக்கும் தினகரனுக்குமான தகவல்களை பகிர்ந்துகொண்டதன் பிறகு, ‘பேட்டி எடுத்துட்டீங்களா’ என்று அத்தனை போன்கள் வந்திருந்தன. ஆனால் அந்த பேட்டி ரெக்கார்டு ஆகாமல், அந்த மெமரி சிப்பில் தொழில்நுட்ப ரீதியான சிக்கல் உண்டாகியதால் எங்கள் கேமராமேன் உட்பட பலரும் பெருமளவில் முயற்சித்தோம்.

ஆனாலும் சோர்ந்துபோகாமல் துணிச்சலோடு சசிகலாவை அணுகினோம். பன்னீர் செல்வத்துக்கு பிந்தைய பேட்டியாகவும் அவருக்கு பதில் தரும் வகையிலாலான பேட்டியாகவும் கொடுக்கச் சொல்லி கேட்டோம். சசிகலா நீண்ட நெடும் முயற்சிக்கு பிறகு பேட்டி தர ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் நான்கைந்து கேள்விகளுக்கும் 5 நிமிடங்களுக்கும் மட்டுமே அனுமதி தரப்பட்டது.

எனினும் சசிகலாவை பொருத்தவரை தொலைக்காட்சி பேட்டிகள் கொடுப்பது அப்போது அவருக்கு புதிதாக இருந்தது. ஆனால் அவர் அந்த மைக் செட்டப்பினை தனக்கு முன்னாள் தரையில் வைத்திருந்ததை பலரும் தவறாக விமர்சித்திருந்தனர். பலரும் உள்நோக்கத்துடன், அந்த மைக் பாக்ஸின் மூலம் யாரோ சொல்லிக்கொடுக்கிறார்கள், இது ஒரு செட்டப் பேட்டி என்று மீம்ஸ் எல்லாம் போட்டனர்.  எனக்கு அவற்றால் சிரிப்புதான் வந்தது. ஆனால் சசிகலா பேசுவதை விரும்பாத யாரோதான் அவ்வாறு செய்திருக்க வேண்டும்.

எனினும் சசிகலாவின் அந்த பேட்டியை பன்னீர்செல்வத்தின் பேட்டி இல்லாமல் போடுவதை நாங்கள் தவிர்த்தோம். அந்த மெமரி சிப் சிக்கலை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அதனால் பன்னீர் செல்வத்தை மீண்டும் அணுகி, இன்னொரு சின்ன பேட்டி என்று கேட்டு கூடுதலாக 20 நிமிடம் ஷூட் செய்தோம்.  ‘நான்தான் காலையிலேயே பேட்டி அளித்துவிட்டேனே.. மீண்டும் எதற்கு?’ என்றெல்லாம் அவர் சொல்லியிருந்தால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம். அவரது பெருந்தன்மையை போற்றியாக வேண்டும்.

என்று மு.குணசேகரன் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Tags : #SASIKALA #OPS #GUNASEKARAN #JOURNALIST #TAMILNADU