'எனக்கு ஓய்வே கிடையாது'...அடுத்த அவதாரம் பயிற்சியாளரா?கலக்க இருக்கும் அதிரடி வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 14, 2018 08:30 PM
IPL 2019Gautam Gambhir expected to join as a coach for Kings XI Punjab

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அதிரடி வீரர் கவுதம் கம்பீர்,வருகின்ற ஐபிஎல் போட்டியில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக,தனது அதிரடியை தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பெற்று,விளையாடிய கவுதம் கம்பீர், கடந்த வாரம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் அடங்கும்.மேலும்

 

147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். தனது அதிரடியான பேட்டிங் திறமையால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எதிரணி வீரர்களின் வயிற்றில் புளியை கரைத்தவர்.37 டி20 போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும். அதன்பின், கடைசியாக ரஞ்சிப்போட்டியில் மட்டும் விளையாடியதோடு தனது கிரிக்கெட் பயணத்திலிருந்து விடைபெற்றார்.

 

ஓய்வுக்குப்பின் பயிற்சியாளர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராகச் செல்ல கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.கம்பீர் ஓய்வு பெற்றவுடன் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்த கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி, விரைவில் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கட்டும், எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தது.

 

அதற்கு பதில் ட்வீட் செய்த கம்பீர், என்னை வாழ்த்திய கிங்ஸ்லெவன் அணிக்கு நன்றி, விரைவில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பதில் ட்வீட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி , உங்களை நாங்களும், எங்களின் சிங்கங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்று தெரிவித்தது.

 

மைக் ஹெசன் தற்போது கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.ஆனால் அவர் தலைமையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.அதனால் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் அல்லது பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது.இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.