மோசமான வானிலை,காலியான எரிபொருள்...பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய சூப்பர் ஹீரோக்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 27, 2018 02:37 PM
After Multiple Systems Failure Air India Pilots Saved 370 Lives

விமானத்தின் அனைத்து அடிப்படை கருவிகள் செயலிழந்த நிலையிலும் ஏர் இந்தியாவின் காக்பிட் குழு சாதுரியமாக விமானத்தை தரை இறக்கி பெரும் விபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

 

கடந்த 11 ஆம் தேதி, டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா 101 என்ற விமானம் தரையிறங்க தயாராக இருந்தது.அப்போது தான் விமானத்தில் உள்ள மூன்றில் 2 ரேடியோ ஆல்டிமீட்டர் செயலிழந்து இருந்ததை விமானி கண்டுபிடித்தார்.அந்த பிரச்சனை குறித்து ஆராய்வதற்குள் தானாக தரையிறங்கும் அமைப்பிலும் கோளாறு ஏற்பட்டது.

 

சோதனை மேல் சோதனையாக விமானம் தரையிறங்கும் பகுதியில் வானிலையும் மிகவும் மோசமானதாக இருந்தது. அடுத்த பேரடியாக எரிபொருளும் தீர்ந்து போகும் நிலையில் இருந்தது. இவ்வாறு  பல விதங்களில் ஏற்பட்ட  பிரச்சனைகள் எல்லாவற்றையும் சமாளித்து, விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாமல் விமானத்தை பத்திரமாக தரையிறங்கி இருக்கிறது ஏர் இந்தியா 101 விமானத்தின் காக்பிட் குழு.

 

நடந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தின் சீனியர் கமாண்டர், கேப்டன் ரஸ்டாம் பாலியா கூறுகையில் "நாங்கள் சரியான நேரத்தில் விமானத்தை தரையிறங்கி இருக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும்.அப்போது எங்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையும் சாதகமாக இல்லை.தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக விமானத்தின் பல கருவிகள் செயலிழந்து கொண்டிருந்தன.எரிபொருளும் குறைவாக இருந்தது.

 

இதனால் மேற்கொண்டு எடுக்கப்படும் முடிவுகளில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.எல்லாவற்றையும் சமாளித்து தரையிறங்கலாம் என்ற சந்தர்ப்பத்தில் வானிலையும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.மோசமான வானிலை காரணமாக ரன்-வேயானது வெறும் 400 அடிகள் உயரத்தில் இருந்தபோது தான் எங்களுக்கு தென்பட்டது.

 

ஆனால், விமானம் செல்லும் வேகத்துக்கு 1.5 வினாடிகளில் ரன்-வேவுக்குச் சென்றுவிடுவோம் என்பது தெரிந்தது.இருந்தபோதும் அனைத்தையும் சமாளித்து எந்த வித பிரச்னையுமின்றி விமானத்தை தரையிறக்கியதாக கேப்டன் ரஸ்டாம் பாலியா தெரிவித்தார்.

 

ஆபத்தான தருணத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட காக்பிட் குழுவை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Tags : #FLIGHT #AIR INDIA #COCKPIT