சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 28, 2018 11:02 AM
Women of all ages allowed in Sabarimala temple - SC

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த பொதுநல மற்றும் தனி நபர் தொடர்ந்த வழக்குகளுக்கான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

 

பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆா்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தொடா்ச்சியாக 8 நாள்கள் விசாரணை செய்தது.

 

இந்நிலையில் இந்து பெண்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாலும், கடவுளுக்கு முன் ஆண்-பெண்-மூன்றாம் பாலின பேதம் பார்த்தல் அறமல்ல என்பதாலும், மதத்தின் ஏற்றுக்கொள்ளத் தகாத ஆணாதிக்கத்துக்கு இடம் கொடுத்து பெண் உரிமையை இந்த கட்டுப்பாடு மறுப்பதாலும், அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த கட்டுப்பாட்டை நீக்கி, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்கிற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அதிரடியாக அளித்து உத்தரவிட்டுள்ளது.

 

குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் கட்ட பிரம்மச்சரிய கடவுளாக பார்க்கப்படும் ஐயப்பனை வழிபடுதலுக்கு எதிராகவே இந்த நடைமுறை புழக்கத்துக்கு வந்தது. ஆனால் இதற்கும் கடவுளை வழிபடுதலுக்கும் சம்மந்தம் இல்லை என்று இன்றைய உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.  2006-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

Tags : #READYTOWAIT #SABARIMALAVERDICT #SUPREMECOURT #RIGHTTOPRAY