‘அத கொஞ்சம் சரி பண்ணுங்க சார்’.. மனு கொடுத்து அசத்திய யு.கே.ஜி மாணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Selvakumar | Feb 22, 2019 04:21 PM

யு.கே.ஜி படிக்கும் மாணவர் ஒருவர் தனது பள்ளிக்கு எதிரே உடைந்து வீணாய் போன தண்ணீர் குழாயை சரிசெய்ய வேண்டும் என ஆணையருக்கு மனு கொடுத்தது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

UKG Student requests Municipal Commissioner to repair broken water tap

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியில் சியாம் கிருஷ்ணா என்கிற 4 வயது மாணவர் யு.கே.ஜி படித்து வருகிறார். இவர், தான் படிக்கும் பள்ளிக்கு முன்பு தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாய் போவதை சில நாள்களாக கவனித்து வந்துள்ளார். ஆனால் இதை யாரும் சரிசெய்யாமல் இருந்துள்ளனர்.

அதனால் மாணவர் சியாம் நகராட்சி ஆணையருக்கு உடைந்த தண்ணீர் குழாயை சரிசெய்யவேண்டி ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில்,‘பள்ளியில் எங்களுக்கு குடிநீர் தேவை பற்றியும், தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் குறித்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் எங்கள் பள்ளியில் முன்னால் ஒரு தண்ணீர் குழாய் உடைந்து தினமும் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதை தங்களது கவனதிற்கு யாரும் கொண்டுவந்தார்களா என தெரியவில்லை. தற்போது கோடைக்காலம் என்பதால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இங்கே தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனால் உடனடியாக தண்ணீர் வீணாதை தடுக்க வேண்டும் என் சார்பாகவும், பள்ளி நண்பர்கள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். தண்ணீர் வீணாவதை தடுப்பதற்காக மாணவர் சியாம் கிருஷ்ணா எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #TRICHY #STUDENT #WATER #COMPLAINT