24 அணைகள் திறப்பு..வெள்ளத்தில் மிதக்கும் கேரளா..உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு !

Home > News Shots > தமிழ்

By |
kerala rains landslide idukki dam periyar river dies 26

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

 

குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு,மலப்புரம்,வயநாடு,கொல்லம் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.இதனால் பல வீடுகள் சரிந்து விழுந்துள்ளன.சாலைகள் துண்டானதால் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் உள்ளனர். கொச்சி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

 

கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதனால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு கூடுதலாக ராணுவத்தை அனுப்பியுள்ளது.மேலும் இடுக்கி மாவட்டம் மிகக்கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

 

கேரளாவில் மொத்தமுள்ள 40 அணைகளில் 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.கொல்லம் மாவட்டத்தில் தென்மலை, பத்தனம்திட்டாவில் காக்கி இடுக்கி மாவட்டத்தில் செருதோனி (இடுக்கி அணை) மலங்கரா, கல்லர்குர்ட்டி, லோயர் பெரியார் எர்ணாகுளம் மாவட்டத்தில் இடமலையாறு, பூதாத்தான்கெட்டு திருச்சூரில் பெரிங்கால்குது, லோயர் சோலையாறு, பீச்சி, வழனி பாலக்காடு மாவட்டத்தில் மலம்புழா, மங்கலம், போதுன்டி, கஞ்சிரப்புழா, சிறுவானி, கோழிக்கோட்டில் காக்கையம், வயநாட்டில் பனசுரா சாகர், கரப்புழா, கண்ணுரில் பழசி ஆகிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

 

இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 2,403 அடி ஆகும். இன்று காலையில் நீர் 2,401 அடியை எட்டியது.இதனால் நேற்று  திறக்கப்பட்ட அணை அதன்பிறகு மூடப்படவில்லை. நேற்று ஐந்து மதகுகளில் மத்தியில் உள்ள மதகு மட்டுமே திறக்கப்பட்டது. இன்று காலை மேலும் 2 மதகுகள் 50 செ.மீட்டர் உயரத்துக்கு திறக்கப்பட்டன. விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் இடுக்கி அணையில் இருந்து வெளியேறுகிறது. இதனால் பெரியாறில்  வெள்ளமானது அபாய அளவை தாண்டி செல்கிறது.

 

இந்தியாவின் மிகமுக்கியமான சுற்றுலாத்தனமான கேரளாவிற்கு தற்போது செல்லவேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறித்தியுள்ளது.

Tags : #KERALA #KERALA FLOOD #IDUKI DAM