செஞ்ச உதவிக்கு 'இத்தனை கோடி' பில்லா?.. அதிர்ந்த முதல்வர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 30, 2018 02:27 PM
Centre sends bill of Rs 34 crore to Kerala for using IAF in KL Floods

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டத்திற்காக இந்திய விமானப்படை ரூ.33.79 கோடிக்கு பில் அனுப்பியதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து ஒருவாரம் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் பலியானார்கள், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், விமானப்படையினர், துணை ராணுவம், போலீஸார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.

 

வெள்ளத்தின் போது வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய விமானப்படையை சேர்ந்த வீரர்கள் மீட்டனர்.குறிப்பாக முதியோர்கள், கர்ப்பினிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை மீட்ட விமானப்படையினரை பலரும் பாராட்டினார்கள். சிலர் தங்கள் வீடுகளின் மாடியில் 'தேங்க்ஸ்' என்று எழுதி நன்றியைத் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் விமானப்படையினரின் சேவைப் பாராட்டப்பட்டது.

 

இந்நிலையில் தாங்கள் செய்த சேவைக்கு தற்போது கேரள மாநில அரசிடம் 'கடிதம்' அனுப்பி ரூ.33. 79 கோடி கேட்டுள்ளது அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் ''கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தில் ரூ.31 ஆயிரம் கோடி மதிப்புக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேசிய பேரிடர் நிதியாக இதுவரை கேரள அரசுக்கு ரூ.2,683.18 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது மாநிலத்தைக் கட்டமைக்க போதுமானதாக இல்லை,இந்த நிதியை வைத்து மாநிலத்தை மீள்கட்டமைப்பு செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

 

அதோடு முதல்கட்டமாக கேரள அரசுக்கு ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு வெள்ளத்தின் வழங்கியது. ஆனால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அரிசி, மண்எண்ணெய் போன்ற பொருட்களை வழங்கியதற்காகவும், மீட்புப்பணிக்கு உதவியதற்காகவும் ரூ.290 கோடி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் மத்திய அரசு அனுப்பும் ரூ.600 கோடியில் ரூ.290 கோடி மீண்டும் அவர்களுக்கே  சென்றுவிடும்.

 

இது தவிர்த்து வெள்ளத்தின் போது, வீடுகளின் மாடியில் சிக்கி உயிருக்குப் போராடிய எண்ணற்ற மக்களை விமானப்படையினர் மீட்டது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், வெள்ளத்தின் போது செய்த மீட்புப்பணிக்காக ரூ.33.79 கோடி பில்தொகை செலுத்த விமானப்படை கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.இது தான் எங்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.மேலும் மத்திய அரசு எங்களுக்கு போதுமான நிதியையும் வழங்கவில்லை,அதோடு வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி உதவியையும்  வாங்க,மத்திய அரசு அனுமதிக்கவில்லை என வேதனையுடன் குறிப்பிட்டார்.