'மினிமம் பேலன்ஸ் இல்லன்னா,எங்களுக்கு பைன்'...அப்போம் ஏ.டி.எம்'மில் பணம் இல்லன்னா?எஸ்.பி.ஐ'யை அதிரவைத்த ''காமன் மேன்''!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 04, 2019 01:50 PM
SBI fined Rs 2,500 after its ATM failed to dispense cash

வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கும் வங்கி,தனது வங்கி ஏ.டி.எம்'மில் மட்டும் பணம் இல்லாமல் வைக்கலாமா என வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கில்,எஸ்.பி.ஐக்கு அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது,நுகர்வோர் நீதிமன்றம்.

 

பொதுத் துறை வங்கிகள் கடந்த 42 மாதங்களில் தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதமாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்-மைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாகவும் வசூலித்த தொகை 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்று மக்களவைக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

 

பொதுத் துறை வங்கியான எ.ஸ்.பிஐ-யில் சேமிப்புக் கணக்குக்கான குறைந்தபட்ச மாத இருப்புத் தொகை, மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,000, நடுத்தர நகரங்களில் ரூ.2,000, கிராமப் புறங்களில் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைத் தங்கள் கணக்கில் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை,ஜிஎஸ்டி அல்லாமல் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ஒரு எ.ஸ்.பிஐ வங்கி ஏ.டி.எம்'மில் பணம் எடுக்க வேறொரு வங்கியின் வாடிக்கையாளர் சென்றிருக்கிறார்.அப்போது அந்த ஏ.டி.எம்'மில் பணம் இல்லை என வந்துள்ளது.3 வெவ்வேறு தினங்களிலும் இது போன்றே நடந்துள்ளது.இதனால் கடுப்பான அந்த வாடிக்கையாளர்,ராய்ப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

வழக்கு விசாரணையின் போது  எஸ்பிஐ வங்கித் தரப்பில், இணையதள சேவையில் ஏற்பட்ட தடங்கல் தான் பணம் வராததற்கு காரணம் என எ.ஸ்.பி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இதற்கு இணையதள சேவை வழங்கும் நிறுவனம்தான் பொறுப்பு என்றும் சம்பந்தப்பட்ட நபர் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்ல என்பதால், அவர் தங்கள் வங்கிச் சேவையின் வரம்புக்குள் வரமாட்டார் என்றும் வங்கித் தரப்பில் வாதிடப்பட்டது.

 

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் ``3 வெவ்வேறு தினங்களில்' பணம் இல்லை' என்று ஏடிஎம் காண்பித்துள்ளது. உங்கள் வாதப்படி இணையதளச் சேவையில் தடங்கல் என்றால்,எப்படி ஏடிஎம் மட்டும் அவ்வாறு காட்டியது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காவிட்டாலோ அல்லது அந்தத் தொகை குறைந்தாலோ உடனே அபராதம் விதிக்கும் வங்கி, தனது வங்கி ஏடிஎம்மில் மட்டும் பணம் இல்லாமல் வைக்கலாமா?" என கடுமையான கேள்விகளை எஸ்பிஐ வங்கியை நோக்கி எழுப்பினார்.

 

அதோடு ``வாடிக்கையாளர் ஏடிஎம்யை பயன்படுத்துவதற்கான முழு ஆண்டு கட்டணத்தையும் முன்கூட்டியே வங்கிகள் வசூலித்துக் கொள்ளும்போது, எந்த ஒரு ஏடிஎம்மையும் வாடிக்கையாளர் ஒருவர் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிமை உள்ளது" என்று கூறிய நீதிபதி 'சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ வங்கி 2,500 ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று,அதிரடியான உத்தரவை பிறப்பித்தார்.

 

ஏ.டி.எம்யில் பணம் இல்லை என வந்ததிற்காக நீதிமன்றம் அபராதம் விதித்ததை சற்றும் எதிர்பாராத  எஸ்.பி.ஐ,தீர்ப்பை கண்டு கொஞ்சம் ஆடி தான் போயிருக்கிறது.

Tags : #SBI #MINIMUMBALANCE #ATM