‘பேங்க்ல இருந்து பேசுறோம்’.. என்று கூறி கல்வி அதிகாரியிடமே ஏடிஎம் நம்பர் வாங்கிய மோசடி கும்பல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 10, 2018 01:19 PM
Fraudster cheats TN Education Officer after getting atm card details

கல்வி அறிவு பயின்றவர்கள் எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு கல்வியாளர்கள் சொல்வதுண்டு.  மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரியாக இருப்பவர்தான், அந்த மாவட்டம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து, அதன் மூலம் மாணவர்களுக்கு அறிவை புகட்டி, அந்த அறிவினை மாணவர்களின் இல்லம் தோறும் கொண்டுசென்று சேர்க்கும் பொறுப்பு மிக்கவர்கள். 


ஆனால் அப்படி ஒரு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரியிடமே போனில் பேசி OTP நம்பரை கேட்டு வாங்கி அதிகாரியின் வங்கிக் கணக்கில் இருந்த 78 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரியும் பி.எச்.டி படித்தவருமான, புகழேந்தி, திருச்சியில் இருக்கும் பாரத் ஸ்டேட் வங்கியில் தான் வைத்துள்ள வங்கிக் கணக்குடன் தொடர்புடைய ஏடிஎம் கார்டினை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.


இந்நிலையில், அவரது செல்போனுக்கு யாரோ போன் செய்து வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, ஏ.டி.எம் கார்டின் நம்பர் மற்றும் பின் நம்பரைக் கேட்டுள்ளனர்.  முன்னதாக வங்கியில் ஏடிஎம் கார்டுக்காக விண்ணப்பித்திருந்ததால், புகழேந்தி தனது விபரங்களை கொடுத்துவிட்டு, மூன்று முறை தனது செல்போனுக்கு வந்த OTP நம்பரையும் அந்த நபர்களுக்கு கொடுத்துள்ளார்.  அவ்வளவுதான், அடுத்த சில நேரத்துக்குள் அவரது கணக்கில் இருந்து 78 ஆயிரம் ரூபாய்க்கு பொருள்கள் வாங்கியதற்கான பணம் எடுக்கப்பட்டதாக பேங்க் நோட்டிபிகேஷன் மெசேஜ் வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார் புகழேந்தி.


இதனை அடுத்து அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதன் பேரில் அந்த மோசடி கும்பல் தேடப்பட்டு வருவதோடு, இதுபோன்ற போன்ற போன் கால்கள் வந்தால், எச்சரிக்கையாக இருக்கும்படியும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், வங்கிக் கணக்கு தொடங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் இருக்கும் முக்கியமான வரியே, ‘பேங்கில் இருந்து யாரும் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்யவோ, கணக்கு விபரங்களை கேட்கவோ மாட்டார்கள்’ என்பதுதான். இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால், ஏமாற்றுக்காரர்களின் வேலை சுலபமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #BANK #ATM #PINNUMBER #OTP #FRAUDSTERS #CRIME #CYBERCRIME #TAMINADU #BIZARRE #AWARENESS