பேட்டி அளித்தபோது கண்ணீர் விட்டு அழுத கலெக்டர் ரோகிணி.. காரணம் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 02, 2018 03:03 PM
Collector Rohini Cries while giving interview, this is the reason

சேலத்தில் கலெக்டர் ரோகிணி, பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிக் கொண்டிருந்தவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, நா தழுதழுத்து கண்ணீர் மல்க அழத் தொடங்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

நம்மூருக்கு கிடைத்துள்ள கலெக்டர்கள் எல்லாம் மிகுந்த சமூக அக்கறையுடன் இருப்பதையும், பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதையும் காண முடிகிறது. அவ்வகையில், மிகவும் நன்றாக படிக்கக் கூடிய ஒரு பெண் மாணவி, பொருளாதார ரீதியாக பின் தங்கியிருப்பதாலும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாலும் அவர் படிக்க விரும்பும் படிப்புக்கான கல்வித் தொகையை கட்டுவதில் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இரண்டு வருடம் நன்றாக படித்த அந்த மாணவி, மூன்றாவது வருடத்தில் கல்வித்தொகையை கட்ட முடியாததால், மேற்கொண்டு கல்வி பயில் முடியாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

 

இந்த நிலையில், அந்த மாணவியின் அம்மாவும், நண்பர்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.  அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த கலெக்டர் ரோகிணி, உடனடியாக இந்தியன் வங்கி மூலம் கடன் உதவியை 10 நிமிடத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.

 

அதன் பிறகு பேசிய ரோகிணி, ‘இதை தான் வெறும் கலெக்டராகச் செய்யவில்லை என்றும், தன்னை போல இன்னும் பல பெண்கள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் மேலெழுந்து வந்து நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் அவர்களுக்கு கல்விதான் அத்தியாவசியம் என்றும் கூறும்போது அழத் தொடங்கிவிட்டார். மேலும் அழுதுகொண்டே பேசியவர், ’நன்றாக படிக்கக் கூடிய பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக்கூடிய சூழல் வந்தால், அவர்களுக்கு உதவ 24 மணி நேரமும் ’நாங்கள் இருக்கிறோம்’ என்றும் கூறியுள்ளார். 

Tags : #HELP #COLLECTOR #ROHINI #SELAM #TAMILNADU #EDUCATION #TNGOVT