’கட்டையால் அடித்து’ சிறுத்தையை விரட்டிய தமிழச்சிக்கு ’கல்பனா சாவ்லா’ விருது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 15, 2018 04:49 PM
Kalpana Chawla Award Goes to Brave Tamil Women Muthumari

காட்டுப் புலியை வீட்டு முறத்தால் அடித்து விரட்டிய பெருமைகள் எல்லாம் தமிழ் பெண்களுக்கு உண்டு. சங்ககால பாடல்களில் கூட புலியை முறத்தால் விரட்டிய பெண்களின் கதைகள் பாடல்களாகவே எழுதப்பட்டுள்ளன. தமிழச்சிகளின் இதே வீரத்தை மீண்டும் காப்பாற்றி கல்பனா சாவ்லா விருது வென்றிருக்கிறார் வால்பாறையை சேர்ந்த முத்துமாரி எனும் பெண்மணி.

 

வனப்பகுதிகளில் இருக்கும் வால்பாறையை அடுத்த கள்ளர் என்னும் கிராமத்தில்  அதிக புலிகள் மற்றும் சிறுத்தை நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அப்படித்தான் கடந்த மே மாதத்தில் ஒருநாள் வீட்டை விட்டு வெளியே வந்த முத்துமாரியின் மகளை அங்கு வந்த சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது.

 

இந்த சத்தத்தைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த முத்துமாரி இந்த காட்சியை கண்டதும் நெஞ்சம் பதை பதைத்து செய்வதறியாமல் தவித்தார். ஆனால் மகளை சிறுத்தைக்கு இரையாகி விடக் கூடாது என்று முடிவு செய்த முத்துமாரி உடனடியாக அருகிலிருந்த கட்டையை எடுத்து சிறுத்தையை மிக வேகமாக நெருங்கி ஒரு நாய்க்குட்டியை அடிப்பதுபோல் சிறுத்தையை சரமாரியாக கட்டையால் அடித்து விட்டார்.

 

முத்துமாரியின் அடி தாங்கமுடியாமல் அந்த சிறுத்தை முத்துமாரியின் மகளை விட்டுவிட்டு தான் மட்டும் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடியது. தன் மகளைக் காப்பாற்ற சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டிய முத்துமாரியின் துணிச்சல் அப்போது பரவலாக அனைவராலும் பேசப்பட்டது. பலரும் முத்துமாரியை பாராட்டினர்.

 

இந்நிலையில் மிகவும் துணிச்சலான பெண்களை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசால் கொடுக்கப்படும் அங்கீகாரமும் விருதுமான ’கல்பனா சாவ்லா’ விருது இந்த ஆண்டு வால்பாறை முத்துமாரிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் கொடியேற்றி வைத்த பின்பு முத்துமாரிக்கு அளித்தார். 

Tags : #TAMILWOMEN #DAREWOMEN #WOMENGETSKALPANACHAWLAAWARD #TAMILNADU #TNAWARDS #EDAPADIPALANISAMY #MUTHUMARI