‘மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் விட்டுட்டு பாஜக-அதிமுக-பாமக கூட்டணியா?’.. குஷ்பு பேட்டி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 21, 2019 04:01 PM

‘பாமகவை விட ஒரு தேசிய கட்சிக்கு கேவளமாக தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதே? அவ்வளவு பெரிய பாஜகவுக்கு 40 தொகுதிகளில் 5 தொகுதிகள் கிடைத்திருப்பதனால் அதிமுக-பாஜக-பாமக நல்ல கூட்டணி என்பதா? மானம், ரோஷம், சூடு சொரணை என எல்லாத்தையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு எப்படி வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வருவதா?’

actor and congress member khushbu exclusive interview

காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரான குஷ்பு நமது பிஹைவுண்ட்ஸூக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்தான் மேலே குறிப்பிடப்பட்டவை. இந்த முழுமையான காரசாரமான பேட்டியின் சுருக்கமான பதிவினை இங்கு பார்க்கலாம்.

பாஜக-அதிமுக-பாமக போன்ற கட்சிக் கூட்டணிகள் உருவாவது சிக்கலாகவும் பரபரப்பாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் கூட நீண்ட இழுபறிக்கு பின்னரே நடக்கின்றன. ஒருவழியாக கூட்டணி அமைத்துவிட்டனர். ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகவும் எளிமையாக நடந்தேறிவிடுகிறதே?

முதல் காரணம் திமுக- காங்கிரஸ் இரண்டும் கருத்தளவில் ஒத்துப்போவதுதான். இரண்டாவது, ஒரு கட்சி மற்றும் கட்சித் தலைவர்கள் மீதான இன்னொரு கட்சி மற்று கட்சித் தலைவர்கள் வைக்கும் மரியாதை. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக, பாமக எல்லாரும் கூட்டணிக்கு முதல் நாள் வரை பாஜகவை அவதூறாக பேசியவர்கள்தான். பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸெல்லாம் என்ன ஆனாலும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதெல்லாம 100 சதவீதம் இருக்காது. அது மானங்கெட்ட பொழப்பு என்று சொன்னவர்தான். ஆனால் இந்த கபட நாடகங்கள் திமுக-காங்கிரஸில் இல்லை.

இந்த முரண்பாடுகளைத் தாண்டி, ஆனால் நேரடியாக பார்த்தால் மகாராஷ்டிரா, பீகார் தற்போது தமிழ்நாடு வரை உறுதியான கூட்டணிகளை பாஜக அமைத்து வருகிறது. ஆனால் கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸூக்கு பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன.?

பாஜகவை பற்றிச் சொல்லும்போது செண்ட்ரலில்  56 இஞ்ச் அளவு நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் பிரதமரின் கட்சி தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைவான ஓட்டினை வாங்கிக்கொண்டு 5 தொகுதிகளை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும், பீகாரிலும் கூட கிட்டத்திட்ட இதே நிலைதான். இந்த ஊர்களில் எல்லாம் தனியா நிக்கட்டுமே? காங்கிரஸ் எப்போதும் அவசரப்படாது. அதிமுகவைப் பொறுத்தவரை பாஜக சொன்னதைத் தான் இங்கு செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான்  வட இந்தியாவில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெறுகிறது.

பாமக ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கட்சியாக இருப்பதாக காங்கிரஸூடன் சேர முடியவில்லையா அல்லது காங்கிரஸால் பாமகவுடன் கூட்டணி வைக்க முடியவில்லையா?

பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் என்கிற அவசியம் காங்கிரஸூக்கு கிடையாது. பாமகவை பொறுத்தவரை சந்தர்ப்பவாத அரசியல் கட்சி என்கிற கருத்தினை நான் முன்வைக்கவில்லை. அவர்களுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர்களுக்கு எங்கு லாபமோ அங்கு இணைகிறார்கள். அவ்வளவுதான்.

அப்படியானால் நீங்கள் (காங்கிரஸ்) பாமகவுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?

உறுதிப்படுத்தப்படாத அல்லது அதிகாரப்பூர்வமாக வெளிவிடப்படாத தகவலை கட்சி மேலிடம் சொல்லும், மூத்த தலைவர்கள் சொல்வார்கள்.

காங்கிரஸூக்கும் திமுகவுக்குமான வரலாற்று உறவு பாஜக-அதிமுகவை விட நெருடலாகவே இருந்துள்ளது. ஆனால் தேர்தலை மட்டும் முன்னைலைப்படுத்தி காங்கிரஸ்-திமுக கூட்டணி வைக்கப்படுகிறதா?

இரு கட்சிகளுக்குமான நம்பிக்கைதான் ஜனநாயகத்தின் அஸ்திவாரம். மத்திய - மாநில அரசுகளாக காங்கிரஸ் மற்றும் திமுக இருந்தபோது முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் பிரியவில்லை. அதனால் எங்களது அரசியல் சந்தர்ப்பவாத அரசியல் அல்ல.

ஈழத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் நிலைப்பாடு காங்கிரஸூக்கு எதிராக இருந்தது. அதனால் திமுக மீது அழுத்தம் கொடுத்தனர். ஆனால் திமுக தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. காங்கிரஸூடனான உறவை முறித்துக்கொள்ள திமுக தயாராக இல்லை. சரிதானே?

ஏன் இப்போது திமுக குரல் கொடுக்கவில்லையா? இந்த 5 ஆண்டு பாஜக, அதிமுக அரசுகள் என்ன செய்தன? இது நீதிமன்ற விவகாரம்.

காங்கிரஸின் தலைவர் என்றால் யார்?

ராகுல் காந்தி என்பதில் சந்தேகம் இருக்கா?

அப்படியென்றால் அவர்தான் பிரதமர் வேட்பாளரா?

அது யாரென்று நாங்கள் சொல்லவே இல்லை. பாஜகவெல்லாம் முதல்வர் வேட்பாளர்கள் யாரென்றே அறிவிக்காத நிலையில் நாங்கள் மட்டும் ஏன் சொல்ல வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கட்டும் நாங்கள் சொல்கிறோம். நாங்கள் தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க நினைக்கிறோம். அதற்காகவெல்லாம் இப்போதே நாங்கள் பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க வேண்டும் என்றில்லை. மோடியா? ராகுல்காந்தியா? என்று நாங்கள் சொல்லாமலே, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று மக்களே சொல்கிறார்கள்.

இந்தியாவே ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நினைக்கட்டும். காங்கிரஸ் கட்சியின் உத்தேசமான முடிவுதான் என்ன? கடந்தமுறை சோனியா காந்திக்கு பதில் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டாரே (ஒருவேளை சோனியா வெளிநாட்டுக்காரர் என்பதாலோ தெரியவில்லை)?

ரூம் போட்டு யோசித்து இஷ்டத்துக்கும் யோசிப்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அது சோனியா காந்தியின் முடிவு. அது அவர்களின் பெருந்தன்மை. மன்மோகன் சிங் அதற்கு தகுதியானவராகவும் இருந்தார். இம்முறை நாங்கள் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இப்போது உறுதியாகியிருக்கும் அதிமுக-பாஜக-பாமக கூட்டணிகள் பற்றிய உங்களது இறுதியான கருத்து?

பேரம் பேசப்பட்ட இந்த கூட்டணியை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. தம்பிதுரையெல்லாம் கூட்டணிக்கு முதல்நாள்வரை அந்த கட்சிகளை விமர்சித்தார். இந்த முதல்வர்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தங்களுக்குத்தானே கடவுள் போல குலதெய்வம் போல வீடியோ எடுத்து திரையரங்கத்தில் படம் ஓட்டுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து என்ன மாதிரியான ஒத்துழைப்பை தரப்போகிறீர்கள்.?

அரசியலமைப்புச் சட்டத் திட்டங்களின்படி மக்களை சந்தித்து உரையாடி அவர்களின் பலதரப்பட்ட பிரச்சனைகளை கேட்டறிய வேண்டும். அதன் பிறகுதான் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும். திமுக கூட்டணி கட்சி எனும்போது அவர்களுக்கு நாங்களும் எங்களுக்கு அவர்களும் உழைக்க வேண்டும்.

தகவல்: திமுக-காங்கிரஸ் நாடாளுமன்ற கூட்டணியில் காங்கிரஸூக்கு தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Tags : #BJP #AIADMK #CONGRESS #KHUSHBU #INTERVIEW