சூப்பர்ஹிட் பாடலை இந்த ஹீரோ பாட ஐடியா சொன்னது யுவன் தான் - இயக்குநர் சுவாரஸ்யம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் 22 ஆண்டு கால வெற்றிப் பயணம் குறித்து பிரபல இயக்குநர் லிங்குசாமி பிரத்யேகமாக நம்மிடையே பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Director Lingusamy share his experience with Yuvan - 22 years of Yuvanism

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பல விஷயங்களை Behindwoods-2க்கு அவர் அளித்த பேட்டியில் பகிர்ந்துக் கொண்டார்.

‘சண்டக்கோழி’, ‘வேட்டை’, ‘பையா’, ‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் லிங்குசாமி-யுவன் கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் ஹிட்டடித்துள்ளன. பாடல்கள் மட்டுமின்றி பிஜிஎம்-லும் அசத்தும் யுவன், இந்த திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றியிருப்பார்.

யுவனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் லிங்குசாமி, அஞ்சான் படத்தில் ‘ஏக் தோ தீன்’ பாடலை சூர்யா பாடியது பற்றி பேசினார். சூர்யா இந்த பாடலை பாட வேண்டும் என்ற ஐடியாவை கொடுத்தது யுவன் தான். அவரிடம் சொன்னபோது முதலில் பயந்தார். பின், 50 பாடல்கள் ரெக்கார்டிங் முடித்தவர் போல் அசால்ட்டாக பாடிவிட்டுச் சென்றார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டானது.

எந்த ஒரு ஃபார்மேட்டும் இல்லாமல் சகஜமாக எங்களது பணி நடக்கும். அப்போது யுவன் சொல்வார், ரெகுலராக மியூசிக் பண்ணிட்டு இருக்கோம், ட்ரெண்ட் மாறிக்கிட்டு இருக்கு ஜி, நாம அப்டேட் ஆகணும் என்பார். நிறைய பாடல்கள் சீன் சொன்ன அடுத்த ஒரு சில நிமிடங்களில் கம்போஸ் செய்துவிடுவார்.

ஆனால், பையா திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘என் காதல் சொல்ல நேரமில்லை’ பாடலுக்கு எந்த டியூனுமே செட்டாகவில்லை. சீனை அவரிடம் விளக்கினேன், என்னிடம் ஆல்பத்துக்காக ரெடி பண்ணின பாடல் இருக்கு அதை கேளுங்க ஜி என்றார். கேட்டதும் அந்த டியூனை மிஸ் பண்ண மனமில்லை, உடனே எனது சீனை டியூனுக்கு ஏற்ற மாதிரி மாற்றிவிட்டேன் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஹிட் பாடலை இந்த ஹீரோ பாட ஐடியா சொன்னது யுவன் தான் - இயக்குநர் சுவாரஸ்யம் VIDEO