அவசர கைது ஏன் ? திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு !

Home > News Shots > தமிழ்

By |
Justice refusing the request of tn police in thirumurugan gandhi issue

திருமுருகன் காந்தியை  சிறைக்கு அனுப்ப சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.தேவைப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் திருமுருகன் காந்தியை காவல்துறையினர்  விசாரிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.மேலும் மேலும் திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறித்தும், சென்னை-சேலம் பசுமை வழிசாலைத் திட்டம் குறித்தும் பேசினாராம். திருமுருகன்காந்தியின் இந்தப் பேச்சு, மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் விடியோ காட்சியாக வெளியிடப்பட்டிருந்தது.

 

இதில் திருமுருகன்காந்தி அரசுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து இருந்ததாக கூறி சென்னை குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த க.மதன்குமார் என்பவர், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், திருமுருகன்காந்தி அரசுக்கு எதிரான பேசியது உறுதி செய்யப்பட்டது.

 

இதையடுத்து, அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே பகை ஊட்டும் வகையில், தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்தோடு கலகத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்நிலையில், ஜெனீவாவில் இருந்து திருமுருகன்காந்தி இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் எடுத்தனர். இதன் ஒரு பகுதியாக திருமுருகன்காந்தி, தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு போலீஸார் 'லுக் அவுட்' நோட்டீஸ் அளித்தனர்.

 

இந்நிலையில் ஜெனீவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன்காந்தி வந்தார். அப்போது அவர் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதைப் பார்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகளும், சுங்கத் துறை அதிகாரிகளும் திருமுருகன் காந்தியை கைது செய்து, பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

பெங்களூரு போலீஸாரால் திருமுகன் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீஸார், பெங்களூரு சென்று திருமுருகன் காந்தியை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

 

இதையடுத்து அவரை சென்னை சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று தெரிவித்து விட்டார். அதே சமயம் திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேரம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும், அதற்கு திருமுருகன் காந்தி முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : #TAMILNADUPOLICE #THIRUMURUGAN GANDHI