‘அழாதீர்கள்’.. ஆறுதல் கூறி, நிதியுதவி செய்யும் இயக்குநர்கள் பட்டாளம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 23, 2018 07:50 PM
Bharathiraja, Vetrimaran, Ameer and others in Gaja Cyclone Relief Camp

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கான கடமைகளை ஆற்றுவதற்காக சென்னையில் இருந்து தஞ்சைக்கு சென்றிருக்கிறது மூத்த இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை.

 

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களுடனும், அப்பகுதிகளைச் சேர்ந்த  (சென்னையில் வசிக்கும்) திரைக் கலைஞர்களுடனும், புறப்பட்ட இந்த குழுவில் பாரதிராஜாவுடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், தங்கம், திருமுருகன்,   தங்கசாமி, பாலமுரளிவர்மன், சுரேஷ் உள்ளிட்ட பலரும் சென்றுள்ளனர். அங்குசென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளனர். 

 

முன்னதாக தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன் என்பவர்  தன் தென்னை-பண்ணை-விவசாய நிலங்களை கஜா புயல் தாக்கியதால் மணமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

 

இந்நிலையில் அவரது குடும்பத்தாரை இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஐம்பதினாயிரம் ரூபாய் பண உதவியும் வழங்கினர். அதோடு பொருளாதார வசதியுள்ள நல்ல உள்ளங்கள் இந்த குடும்பத்தாருக்கு மேலும் உதவுமாறு ம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

 

இந்த குழுவினர், சுந்தர்ராஜனின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் அழுதுகொண்டே நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் அந்த குடும்பத்தார் அழுதபோது அவர்களிடம் ‘அழாதீகள்’ என வெற்றிமாறனும், ‘எங்களால் முடிந்தது பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று பாரதிராஜாவும், ’சுந்தர்ராஜன் இருந்து செய்யவேண்டியதை உங்கள் மகன் செய்வார் கவலைப்படாதீர்கள்’ என்று அமீரும் கூறியுள்ளனர். 

 

உண்மையில் நாம் அளிக்கும் நிதி உதவிகளைத் தாண்டி, பாதிக்கப்பட்டவர்களின் மனதிற்கு பக்கபலமான ஆறுதலாக, அவர்களின் துயரத்தில் தாங்களும் பங்குகொண்டு, அவர்களுடன் கைகோர்த்து நிற்கும் மனித சக்திகளின் மதிப்பை இவர்கள் உணர்த்தியுள்ளார்கள் என்று இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் நெகிழ்கின்றனர். 

Tags : #GAJACYCLONE #BHARATHIRAJA #AMEER #VETRIMARAN #THIRUMURUGAN #ACTOR #DIRECTOR #KALAIILAKIYAPANBATUPERAVAI #TAMINADU #TANJURE