திருப்பூர், தேனியைத் தொடர்ந்து வீட்டில் பிரசவம் பார்த்த மற்றுமொரு கணவர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 16, 2018 02:20 PM
Another TamilNadu Husband helps his wife to give homebirth

திருப்பூர், தேனி கணவர்களைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இன்னொரு கணவரும்  தன் மனைவிக்கு வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ள தகவல் பேசப்பட்டு வருகிறது.

 

முன்னதாக திருப்பூர் கார்த்திகேயன் வீட்டுமுறை பிரசவத்தை முயற்சித்ததால் அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது. ஆனால் தொடர்ந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வீட்டிலேயே தன் மனைவிக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்ததனால் பிரச்சனையை சந்தித்தார். இதே சமயத்தில்தான் பிரசவத்துக்கு பயிற்சி முகாம் நடத்தவிருந்த ஹீலர் பாஸ்கர் கோவையில் கைது செய்யப்பட்டார்.

 

அதன் பின்னர் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்களின் அறிவுறுத்தலின் பேரில், அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் துறை பயிற்சி பெற்றவர்களே சுகப்பிரசவம் செய்ய தகுதியானவர்கள் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்  பகுதியைச் சேர்ந்த முகமது தாஜூதீன் தன் மனைவி அன்சாலி பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.  வெற்றிகரமாக நிகழ்ந்த இந்த பிரசவத்தில் இத்தம்பதியருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.

 

ஆனால் அருகில் இருக்கும் வீட்டார் இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் அளிக்க,  உடனே அங்கு விரைந்த மாவட்ட சுகாதார இணைஇயக்குநர் ராம் கணேஷ்  தலைமையினான குழுவினர் அன்சாலி பாத்திமாவை பரிசோதித்து, பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இதற்கு அன்சாலி பாத்திமாவும், அவரது கணவரும் மறுத்ததை அடுத்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

பின்னர் காவல்துறையினரின் நீண்ட உரைக்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தேனி கண்ணனுக்கு பிறகு வீட்டில் வைத்து வெற்றிகரமாக பிரசவம் பார்த்ததை அடுத்து, பாதுகாப்பற்ற சூழலில் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்ப்பது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

Tags : #HOMEBIRTH #TAMILNADU #TNHEALTH