'கஷ்டத்தில் பங்குகொண்ட மகன்'... துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாய் உருக்கம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 06, 2018 01:56 PM

கடந்த மே 22-ந்தேதி தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
பேரணியின்போது கலவரம் ஏற்பட்டது. கலவரத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். இதுதவிர 100-க்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி மக்களுக்கு நேற்று நள்ளிரவு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் வழங்கினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியையும் விஜய் அளித்துள்ளார்.
விஜய்யின் வருகை குறித்து துப்பாக்கி சூட்டில் இறந்த ஸ்னோலினின் தாயார் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது,''நேற்று நள்ளிரவு எல்லோரும் ஸ்னோலினின் மறைவு குறித்து வருந்தியவாறு வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தோம். அப்போது இரண்டு பைக்குகள் வந்தன.யாரென்று பார்த்தப்போது பைக்கில் அமர்ந்து விஜய் வந்தார்.
தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்த விஜய், தொந்தரவு செய்திருந்தால் எங்களை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் மிகவும் எளிமையாக வந்து எங்களது கஷ்டத்திலும், வேதனையில் பங்கெடுத்து சென்றுவிட்டார் இந்த மகன்,'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.











