கேரளாவிற்கு 700 கோடி வாரி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம் !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 21, 2018 03:01 PM
UAE has offered rs 700 crore for kerala floods cm pinarayi vijayan

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது.கேரள வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.பல தரப்பில் இருந்தும் கேரளாவிற்கு உதவிகள் வந்த வண்ணம் உள்ளது.

 

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மத்திய அரசு ரூ.600 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்துள்ளன.

 

இந்தநிலையில் கடும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை சந்தித்திராத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

மீட்பு பணிகள் ஏறக்குறைய முடிவடையும் சூழல் உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 95 சதவீதம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தை மறு உருவாக்கம் செய்வது தான் தற்போதுள்ள சவால்.

 

பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்யப்பட உள்ளது. அந்நாடு துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் ஏராளமான கேரள மக்கள் பணி புரிந்து வருகின்றனர்.

 

அவர்களின் மன வேதனையில் தாங்களும் பங்கு பெறுவதாக அவர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த உதவிக்கு கேரளாவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Tags : #KERALAFLOOD #UAE