திருப்பூரில் யூ-ட்யூப் பார்த்து பிரசவத்திற்கு முயன்ற கணவர்: கர்ப்பிணி உயிரிழப்பு

Home > News Shots > தமிழ்

By |
Pregnant woman dies in delivery attempt based on YouTube videos Tirupu

திருப்பூர் அருகே யூ-ட்யூப் வீடியோக்களைப் பார்த்து பிரசவம் பார்க்க கணவர் முயன்றதால் கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் கார்த்திக்கேயன்(34) - கிருத்திகா(28). இயற்கை மருத்துவத்தில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு ஏற்கனவே ஐந்து வயதில் ஹிமானி என்ற பெண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் கிருத்திகா மீண்டும் கருவுற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து தம்பதியினர் இருவரும் இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பது குறித்த வீடியோக்களை யூ-ட்யூப்பில் பார்த்து வந்துள்ளனர். கிருத்திகாவிற்கு மருத்துவ பரிசோதனை கூட செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கார்த்திக்கேயனின் நண்பர் பிரவீன் தன் மனைவிக்கு கூட மருத்துவ உதவியின்றி பிரசவம் நடந்ததாக கூறியது இந்த தம்பதியினருக்கு நம்பிக்கையை அதிகப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கிருத்திகாவிற்கு பிரசவ வலி வந்ததால் கார்த்திக்கேயன் பிரவீனை உதவிக்கு அழைத்துள்ளார். பின்பு கார்த்திக்கேயன், பிரவீன், அவரது மனைவி மற்றும் கார்த்திக்கேயனின் தாயார் காந்திமதி ஆகியோர் கிருத்திகாவிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.


பெண் குழந்தை பிறந்த பிறகு கிருத்திகாவிற்கு இரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டு அவர் நினைவிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #TIRUPUR #YOUTUBEDELIVERYGOESWRONG #PREGNANTWOMANDIES