திடீரென ஊதா நிறத்தில் மாறிய ஆரஞ்சு பழம்...விலகிய மர்மம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 01, 2018 02:22 PM
Orange turns purple Australian scientists solve fruit mystery

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டில் ஆரஞ்சுப் பழம் ஊதா நிறத்தில் மாறியது ஏன் என்பதற்கான காரணம் என்னவென்பதை பலகட்ட ஆய்விற்கு பிறகு விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

 

பிரிஸ்பேனைச் சேர்ந்த நெட்டி மாஃபீட் எனும் பெண் தனது இரண்டு வயது மகனிற்கு ஆரஞ்சு பழத்தை அறுத்து கொடுத்திருக்கிறார்.அவன் உண்ட பிறகு பாதி அறுபட்ட நிலையில் இருந்த ஆரஞ்சு பழமானது,சிறிது நேரத்திலேயே திடீரெனஊதா நிறத்தில் மாறியது.இதை கண்டு அதிர்ந்து போன அவர் இதனால் தனது மகனிற்கு உடல்நிலை கோளாறு ஏற்படலாம் என எண்ணி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

 

இந்நிலையில் நிறம் மாறிய ஆரஞ்சு பழத்தை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.இதனையடுத்து இது குறித்து பேசிய குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைமை வேதியியலாளர் ஸ்டீவர்ட் கார்ஸ்வெல், பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு நிறம் மாறியதன் காரணங்கள் தெரிய வந்ததாக  தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் கூறுகையில் "ஆரஞ்சுப் பழங்களில் இயற்கையாகவே இருக்கும் ஆன்தோசியானின் (anthocyanins) ஆக்சிஜன் எதிர்ப்பொருள் புதிதாகக் கூர் தீட்டப்பட்ட கத்தியின் இரும்புடன் சேர்ந்து உண்டாகிய வேதியியல் மாற்றத்தால்தான் ஆரஞ்சுப் பழத்தின் நிறம் மாறியது ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.இதனால் பழத்தில் நச்சுத்தன்மை எதுவும் உண்டாகவில்லை என்றும் உடல் நலப் பாதிப்புகள் உண்டாகாது என்றும் கார்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாஃபீட் "நான் மிகவும் அச்சத்தில் இருந்தேன்.தற்போது ஆய்வு முடிவில் மர்மம் விலகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது"என தெரிவித்தார்.

Tags : #SCIENTIST