‘வருமான வரிக்கான, சம்பள உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து உயர்வு’.. பரபரப்பு பட்ஜெட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 01, 2019 04:12 PM

2019- ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த பட்ஜெட் எந்த அளவிற்கு விவசாயிகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது? பட்ஜெட்டின் நிறை குறைகள் என்ன என்பது குறித்த விவாதங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

India- Features of Proposals in The Interim Budget 2019 goes trending

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் இன்று (பிப்ரவரி 01, 2019) தாக்கல் செய்த பட்ஜெட் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம் என்பதுதான் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. அதாவது தனிநபர் வருமான வரி கட்டுவதற்கான, சம்பள உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனால் 3 கோடி நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ரூ.5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி, அந்த வரியாண்டிலேயே திருப்பி அளிக்கப்பட்டுவிடும் என்பதால் இந்த வரி முற்றாக நீக்கப்படுவதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வருமான வரிக்கான நிரந்தரக் கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  அதோடு வருங்கால வைப்புநிதி கட்டும் ஒரு சந்தாதாரர் உயிரிழந்தால் நிவாரண நிதி 6 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதேபோல் ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சம் பெறுபவர்கள், ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை என்றும், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ரூ. 15 ஆயிரம் வரை ஊதியம் பெற்றுவரும் பட்சத்தில், அவர்களுக்கு மாத ஓய்வூதியம் குறைந்தபட்சமாக ரூ.3000 வழங்கப்படும் என்றும் இதற்கென மாதம் ரூ.100 பிடித்தம் செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்றபடி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வருடத்துக்கு ஒரேஒருமுறை வரித்தாக்கல் செய்தால் மட்டுமே போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பாக 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளை பொருத்தவரை, சம்மான்நிதித் திட்டத்தின்கீழ்,  ஆண்டுக்கு ஒருமுறை 6000 ரூபாய் நேரடியாக வங்கிப் பரிமாற்ற அடிப்படையில் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்றுப் பேசிய அமித்ஷா, விவசாயிகள் மேலும் கடன் வாங்காத அளவுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, 2 ஹெக்டர் வரை நிலம் வைத்திருக்கும் சிறுகுறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு  மூன்று தவணைகளாக  ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீனவர்கள், நலனுக்காக பிரத்யேகமான மீன்வளத்துறை அமைச்சகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத்தவிர, பசு பாதுகாப்புக்காக ரூ.750 கோடி நிதியும் , தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 குறைந்த பட்ச ஓய்வூதியமாகவும், ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதியும், ரயில்வே துறைக்கு மூலதனமாக ரூ.65000 கோடி நிதியும் வழங்கப்படும் என்று அறிவித்த  தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல்,  ‘இது வெறும் இடைக்கால பட்ஜெட் அல்ல;  ஒரு பெரிய வெற்றி பயணத்திற்கான தொடக்கமாக அமையப்போகும் பட்ஜெட்’ என்று கூறி பட்ஜெட் தாக்கலை நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து நாடாளுமன்ற அவை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் இது இடைக்கால பட்ஜெட் என்பதால்,இதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் அமல் படுத்தபடுவதென்பது அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அமையப்போகும் ஆட்சியை பொறுத்தது.

Tags : #BUDGETSESSION2019 #INTERIMBUDGET2019