முன்பே திரையரங்கிலோ, ஒடிடியிலோ ரிலீஸ் ஆகியிருந்தாலும் சில புதிய திரைப்படங்கள் இந்த விநாயகர் சதுர்த்தியில் ஸ்பெஷல் ப்ரீமியர் ஒளிபரப்பாக சில டிவி சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. குறிப்பாக நயன்தாரா நடித்த O2, பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2-ஆம் பாகம், துல்கர் சல்மான் நடித்த ஹே சினாமிகா ஆகிய படங்கள் இந்த விநாயகர் சதுர்த்தியில்  ரசிகர்களின் இல்லம் தேடி வருகின்றன.

இவை குறித்த விரிவான நேரம், டிவி சேனல் உள்ளிட்ட சில தகவல்களை இங்கு காண்போம்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிவி ப்ரீமியர் - O2
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிவி ப்ரீமியர் - O2

நயன்தாரா நடித்த O2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியானது. சுவாசப் பிரச்சினை இருக்கும்  சிறுவனுக்கு அம்மாவாக வரும் நயன்தாரா, மகனின் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க, சொகுசு பேருந்தில் வெளியூர் பயணம் செல்கிறார்.  சுவாச பிரச்சனை இருப்பதால், அவரது மகனுக்கு எந்நேரமும் செயற்கை ஆக்ஸிஜன் ஏறிக்கொண்டே இருக்கும். இப்படி இருக்க திடீர் பேரிடரால், பேருந்து மண்ணுக்கடியில் சென்றுவிட, அப்போது பேருந்தில் இருக்கும் சக பயணிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நயன்தாராவின் மகனிடம் இருக்கும் ஆக்சிஜனை பிடுங்கிக் கொள்ள முயற்சிப்பதும், ஒரு அம்மாவாக அவர்களுடன் சண்டையிட்டு தன் மகனை காப்பாற்ற நயன்தாரா முயற்சிப்பதுமான போராட்டமே O2.

மனிதர்கள் சர்வைவல் காலகட்டங்களில் மனிதநேயத்தை மறந்து விடுவார்கள்.. சாதாரண மனிதர்கள் கூட அப்போது எந்த எல்லைக்கும் சென்று அசுரத்தனமாக சண்டையிடுவார்கள் என்கிற நவீன கதையாடல் முறையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் பரவலாக பேசப்பட்டது. அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கிய இந்த படம் தான் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக விஜய் டிவியில் வரும் ஆகஸ்டு 31-ஆம் தேதி புதன் கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.