முரளி காலத்து 80-ஸ் பசங்க எல்லாம் ரெண்டு புள்ள பெத்துட்டாங்க, அதர்வா காலத்து 2k கிட்ஸ் எல்லாம் டிக்டாக்லயே கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க, ஆனா இந்த 90-ஸ் கிட்ஸ் மட்டும் தான்ப்பா சிங்கிளாவே இருக்காங்கன்னு பல மீம்ஸ் அன்ட் ட்ரோல்ஸ் பார்த்திருப்பீங்க. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அந்த 90-ஸ் கிட்ஸ் லவ் விஷயத்துல அவ்ளோ சாதாரணமானவங்க இல்ல. லவ் லெட்டர், எஸ்.எம்.எஸ் சாட், வாட்சப்ன்னு ஆல் ஏரியாவுலயும் கில்லி விளையாண்ட பசங்க அவங்க. அப்படிப்பட்ட 90-ஸ் கிட்ஸ் வெறித்தனமா கொண்டாடிய செம காதல் படங்களின் தொகுப்பு தான் இது.!

காதலுக்கு மரியாதை
காதலுக்கு மரியாதை

90-ஸ் கிடஸ்களின் காதல் படங்களை பட்டியலிட்டால், காதலுக்கு மரியாதைக்கு தான் முதல் இடம். அதிக வசனமில்லாமலும் ஆர்பாட்டம் இல்லாமலும் அடக்காம ஜீவா - மினியின் காதலை கவிதையாக காட்சிப்படுத்தியிருந்தார் ஃபாசில். என்னதான் உருக்கமாக காதலித்து இருந்தாலும், பெற்றோர்களுக்காக அந்த காதலை இருவரும் விட்டு கொடுக்க முடிவு செய்ததும் அதே காதலுக்காக பெற்றோர் தங்கள் வரம்புகளை உடைத்தெறிந்த போதும் தான் காதலுக்கு மரியாதை ஒரு க்ளாசிக்காக மாறியது. ஒற்றை புத்தகத்தை இருவரும் சேர்ந்து எடுக்கும் அந்த காட்சி, வருடங்கள் கடந்து 90-ஸ் காதலர்களின் ஃபேவரைட் காட்சியானது. பூவே உனக்காக, லவ் டுடே படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திருப்பிய விஜய், காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் அந்த தலைமுறை காதலர்களின் லைக்ஸை அள்ளினார். அந்தளவுக்கு மினி, மினி என அவர் உருகும் காட்சிகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதே போல ஷாலினியின் மினி கதாபாத்திரம் அப்போதிருந்த டீன் பெண்களை அப்படியே காட்டியிருந்தது மற்றுமொரு சிறப்பு. இதுமட்டுமில்லாம, இளையராஜாவின் இசை தான் படத்தின் மிகப்பெரிய பலமே. என்னை தாலாட்ட வருவாளோ பாடலை கேட்டு தலையாட்டாத இளசுகளே கிடையாது எனும் அளவுக்கு பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. வருடங்கள் எத்தனை உருண்டோடினாலும், காதல் மரியாதை கொடுத்த லவ் ஃபீல் மட்டும் மனம் மாறாத க்ளாசிக்காக நீடிக்கிறது.