‘எங்களுக்கெல்லாம் டிரான்ஸ்பரே விருதுதான்’.. பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் சகாயம் ஐஏஎஸ்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 15, 2019 11:25 PM

15 வருடங்களாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியாவாக திகழும் பிஹைண்ட்வுட்ஸின் 6-வது கோல்டு மெடல்ஸ் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சென்னை டிரேடு செண்டரில் கோலாகலமாக நடந்தது. ‘ஹானரிங் தி இன்ஸ்பிரேஷன்’ என்கிற நோக்கில், சமூகத்தில் முன்னுதாரணமாகவும், வழிகாட்டிகளாகவும் வாழும், அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.ஆர்.நல்லக்கண்ணு அய்யா, திரு. உ. சகாயம் ஐஏஎஸ், திரு நக்கீரன் கோபால், ஆசிரியர் திரு. பகவான் மற்றும் கால்பந்தாட்ட நடுவரும் வீராங்கணையுமான ரூபா தேவி உள்ளிட்ட 5 பேருக்கு இந்த ICON OF INSPIRATION என்கிற விருதினை பெருமிதத்துடன் வழங்கி பிஹைண்ட்வுட்ஸ் கவுரவப்படுத்தியது.

TN - Sagayam IAS inspirational speech in behindwoods gold medals 2018

இவ்விழாவில் சகாயம் ஐஏஎஸ் பேசியதன் சுருக்கமான வடிவம்:

பொதுவாக நாங்கள் நேர்மையாக இருப்பது என்பது எங்கள் சமூகத்திற்காக, விருதிற்காக அல்ல. ஆனால் இதுபோன்ற விருதுகளை நாங்கள் பெறுகின்ற பொழுது எங்களுடைய இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள் என்கிற அடிப்படையில், நான் தமிழகத்தில் முதன்முறையாக மேடையிலே பிஹைண்ட்வுட்ஸ் அளிக்ககூடிய இந்த விருதைப் பெறுகிறேன்.

நான் ஏராளமாக விருதுகளை பெற்றிருக்கிறேன். என்னுடைய நீண்ட பணிக்காலத்தில் 25 முறைக்கு மேலாக நான் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறேன். அவை ஒவ்வொன்றையும் நான் விருதாகத்தான் கருதுகிறேன். அடிப்படையில் எல்லோரும் நினைக்கலாம் இவர்களுக்கு ஊழலுக்கு எதிரான இந்த நேர்மையைத் தவிர வேறெதுமே தெரியாது என்கின்ற தொனியிலே அவர்கள் சொல்லலாம். நான் எண்ணுவது எல்லாம் நம்முடைய சமூகத்தில், நாட்டில் நடக்ககூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இந்த ஊழல் தான் இருக்கிறது என்பதுதான்.

நிதானமாக யோசித்துப் பார்த்தால் பண நலனை நாடுபவன், இன நலனை தூக்கியெறிவான் என்று நான் நம்புகிறேன். நிதியில் குறியாக இருப்பவன் நீதியை நிச்சயமாக அளிக்கமாட்டான் என்று உறுதியாக நாம் நம்புகிறோம். ஊழலில் ஊறித்திளைத்தவன் என் மண்ணினுடைய மக்களுடைய இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு அனுமதி அளித்துவிடுவான் என்றுதான் நாம் கருதுகிறோம்.

எனவே எம்முடைய மண்ணை, எம்முடைய மக்களை காப்பதற்கு எம்மைப் போன்ற அதிகாரத்தில் இருப்பவர்கள் நிகரற்ற நேர்மைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எம்முடைய நீண்ட நெடிய இந்த பயணத்தில் நான் தொடர்ந்து நேர்மையோடு பயணிக்கிறேன். இந்த நேர்மையை என் சமூகத்திற்கான நேர்மை என்று நான் சொல்ல ஆசைப்படுகிறேன். மக்கள் பாதை என்றால் மக்களே தலைமை எடுத்து நடத்தக்கூடிய சூழல்தான் ஏற்படும். நிச்சயமாக நாம் சொல்லுவது எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நம் சமூகத்தில், தமிழ்ச் சமூகத்தில் மாற்றத்தை விளைவிப்பதற்காக நாம் பாடுபட்டு வருகிறோம். நிச்சயமாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது அரசியலில் யார் வந்தாலும் சரி இனி தமிழ்நாட்டில் எவரும் ஊழல் செய்யமுடியாத சூழலை எம்முடைய ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்படுத்துவார்கள்.அதற்கு நாங்கள் நிச்சயமாக வழிகாட்டுவோம் என சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் முதல்வராக இருந்தால், நேர்மை முதலில் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். நேர்மை என்றவுடன் ஏதோ பணப்பிரச்சனை என்று யாரும் கருதிவிட வேண்டாம். அந்த நேர்மையில் மானுடம் இருக்கிறது. மனித நேயம் இருக்கிறது. தன்மானம் இருக்கிறது. சமூக நீதி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை இருக்கிறது. மண்ணை பாதுகாக்க, இயற்கை வளங்களைப் பாதுகாக்க, மண்ணை நேசிக்க கூடிய நேசிப்பு இருக்கிறது. எனவே ஒரு மனிதன் நேர்மையாக இருந்து விட்டாலே, பண்பாடுகளும் அதில் அடங்கிவிடும் என நான் கருதுகிறேன்.

Tags : #SAGAYAMIAS #BEHINDWOODSGOLDMEDALS2018 #ICONOFISPIRATION