‘பாகிஸ்தானுடன் விளையாடலன்னா இழப்பு நமக்குதான்’.. இந்திய கிரிக்கெட் பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 22, 2019 10:36 AM

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

India lose by not playing Pakistan in World Cup 2019, Says Gavaskar

புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 -க்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்புதான் என இந்தியா குற்றம் சாட்டியது. இதனை அடுத்து உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்கள் தெரிவித்தன.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளது கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன், வரவிருக்கும் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்தியா டுடே டிவிக்கு அளித்த பேட்டியில், ‘உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடினால் நிச்சயம் இந்தியா தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நாம் விளையாடாமல் போவதால் பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துவிடும். ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை நாம் தோற்கடித்துள்ளோம். அதனால் பாகிஸ்தான் அணி போட்டியில் முன்னோக்கி செல்வதை தடுக்க வேண்டும்’ என சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

மேலும் பேசிய கவாஸ்கர்,‘இந்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும், இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இழப்பு இந்தியாவுக்குதான்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : #SUNILGAVASKAR #TEAMINDIA #PAKISTAN #WORLDCUP2019