தனது ஆசிரியர்களை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பரியேறும் பெருமாள் இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் ராமின் உதவியாளராக இருந்து பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநரானவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சாட்டை சுழற்றி பெரும் பாராட்டுக்களை பெற்றார்.

Pariyerum Perumal director Mari Selvaraj meets his school teachers

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தான் படித்த பள்ளிக்கூடத்திற்க்கு பல வருடங்களுக்குப் பிறகு சென்று தனது பள்ளி ஆசிரியர்களை சந்தித்திருக்கிறார்.

திருநெல்வேலி அருகில் உள்ள கருங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி க்கு சென்ற இயக்குநர் இந்த சந்திப்பைப்பற்றி கூறுகையில்,

பதினாறு வருடங்களுக்கு பிறகு பள்ளிகூடத்திற்கு போயிருந்தேன். என்னை பார்த்தவுடன் பத்மா டீச்சர் சிரித்த சிரிப்பும் அடைந்த கொண்டாட்டமும் போதும்.  நான் எடுத்த சினிமா என்னை எல்லாருக்குமே மீட்டெடுத்து கொடுத்திருக்கிறது. அந்த முழு நாளும் என் ஆசிரியர்களின் உள்ளங்கையில் குளிர்ந்து இருந்தேன்.

இந்தப் பள்ளி தான் என் கனவை, என் தவறுகளை அங்கீரத்தது. முட்டி போட்ட வகுப்பறையை முத்தமிட வைத்தது. உடைத்து நொறுங்கிய பெஞ்சுகளை எல்லாம் தேடி போய் தேம்பி அழ வைத்தது. கசிந்துருகிய கண்ணீரில் தெரிந்துகொண்டேன், என்னை விட என் கனவு என்னை அதிகம் நேசிக்கிறது.

எனது ஆசிரியர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வாழ்த்துகளை பெற்றது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.