BEHINDWOODS COLUMN

வாத்தியார் இல்லாத வகுப்பறை

Home > Columns

"ஒரு சிறுகதையோ, நாவலோ தரும் அனுபவத்தை, பங்கீட்டை சினிமாவால் தர முடியாது. அதே போல் சினிமா தரும் காட்சி அனுபவத்தை சிறுகதையால் தர முடியாது. நாங்கள் மாய்ந்து ஒரு பாரா வர்ணிப்பதை ஒரு ஃப்ரேமில் அவர்கள் முடித்து விடுவார்கள். இரண்டுமே வெவ்வேறு துருவங்கள்". இந்த வாக்கியத்தை  எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய "பார்வை-360" புத்தகத்தில் எழுதியிருக்கிறார். 

அடிப்படையில் ஒரு பொறியாளரான அவர் , சிறுகதை, நாவல், நாடகம், விமர்சனம், பத்தி, குறுநாவல், சரித்திர நாவல் என கதை எழுதுதலின் எல்லாப்  பரிமாணங்களையும் தொட்டு அவற்றில கரை கண்டவர்.  அவ்வகையில் சினிமாவுக்காக  எழுதுவதையும் ஒரு சவாலாகாவே பார்த்திருக்கிறார். அப்படி, அவரின் சினிமா பங்களிப்பையும் அது, இன்று விட்டுச் சென்ற வெற்றிடத்தை பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ் எழுத்தாளர்களின் கதைகளுக்கும்,  சினிமாவுக்கும் உள்ள தொடர்பு கிட்டத்தட்ட 1935 இல் வெளிவந்த மேனகா முதற்கொண்டே இருந்திருக்கிறது. அந்தப் படம் எழுத்தாளர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதியது. ஆரம்ப காலங்களில் ஜே.ஆர்.ரங்கராஜு, அகிலன், கல்கி, புதுமைப்பித்தன், பாரதிதாசன், எஸ்.எஸ்.வாசன், கொத்தமங்கலம் சுப்பு, அறிஞர் அண்ணா, கருணாநிதி, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையில் தொடங்கி பின்னாளில்  ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, சாண்டில்யன், ரா.கி.ரங்கராஜன், தேவன் , அனுராதா ரமணன், சிவசங்கரி, லக்ஷ்மி,உமா சந்திரன், வாஸந்தி, மகரிஷி, மணியன், தி.ஜானகிராமன், புஷ்பா தங்கதுரை, ராஜேஷ் குமார், ஸ்டெல்லா புரூஸ், பொன்னீலன், பாலகுமாரன், பிரபஞ்சன், பாஸ்கர் சக்தி, ஜெயமோகன்  என்னும் இந்த வரிசை மிகவும் நீண்ட நெடியது.

எழுத்தாளர்களின் நாவல் படமாக்கப்படுவது, வெறும் வசனம் மட்டும் எழுதித்  தருவது முதல் பல்வேறு வகைமைகளில் இது நடந்திருக்கிறது.  சில எழுத்தாளர்கள் படங்களை உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து, தானே எழுதியும் இயக்கியும் இருக்கிறார்கள். இதில் நிகழாத ஒன்று தொடர்ச்சியான  அல்லது பெரும்பான்மையான வணிக வெற்றி. அது வெகு  சிலருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது.  நட்சத்திர அந்தஸ்து கொண்ட எழுத்தாளர் சுஜாதா இதிலும் நீந்தி , பெரும்பாலும் வெற்றி பெற்றவர்.

இயக்குனர் ஷங்கரின் முதல் 3 படங்களான ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் திரைப்படங்களில் எழுத்தாளர் பாலகுமாரனின் பங்களிப்பு இருந்தது. அதன் பின்னர் இந்தியனின் தொடங்கிய சுஜாதா உடனான  வெற்றிக் கூட்டணியின்  பங்களிப்பு, முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என சக்கை போடு போட்டது [ பாய்ஸ் நீங்கலாக ]. எந்திரனுக்கு பின்னால் வந்த எந்த ஷங்கரின் படங்களும்  அதற்கு முன்னர் பெற்ற உச்சங்களை தொடாமல் போனதையும் நாம் பார்த்தோம்.

இதே பங்களிப்பு ஒற்றுமை இயக்குனர் மணிரத்னம் படங்களிலும்  காணலாம். நாயகன் திரைப்படத்தில்  இயக்குனர் மணிரத்னம் பாலகுமாரனை  வசனகர்த்தாவாக பயன்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் ரோஜாவில் தொடங்கிய சுஜாதா உடனான இருவரின் பயணம் திருடா திருடா , பம்பாய், உயிரே,  கன்னத்தில் முத்தமிட்டால் , ஆயுத எழுத்து வரை தொடர்ந்தது. அலைபாயுதே படத்திலும் சுஜாதா அவர்களின் பங்களிப்பு இருந்ததாகப் பதிவிட்டிகிறார். ஆனால் மணிரத்னத்தின் ஆய்த எழுத்திற்கு பின்னர் வந்த அவரின்  மற்ற படங்களில் சுஜாதா இல்லாத ஒரு வெறுமையை நாம் பார்க்கலாம்.

இன்னொரு உதாரணம் கூட இங்கே பார்க்கலாம். புதுப்பேட்டை படத்தில் பாலகுமாரனின் மாயம் இருந்ததையும் அதே இயக்குனரின் என்.ஜி.கே யில் அரசியல் படம் என்பதையும் தாண்டி அந்த படம் மனதில் சுத்தமாக ஒட்டாமல் போனதையும் நாம் பார்த்தோம். ஒரு எழுத்தாளரின் பன்முகத்தன்மை வெறும் வசனத்தோடு முடிந்துவிடுவதில்லை என்பது நடைமுறை உண்மை. ராக்கெட் மிசைல் கடத்தப்படும் ஒரு விஞ்ஞானம் கலந்த துப்பறியும் கதைக்களம் (விக்ரம்), நாசிக்கிலிருந்து போகும் பணப்பெட்டி கொண்ட ஒரு ட்ரையிலர் லாரி  (திருடா திருடா), லஞ்ச லாவண்யங்களை தட்டி கேட்கும் வர்மக்கலை பயின்ற சுதந்திர போராட்ட வீரர்  (இந்தியன்), ஒரு பெண் போராளியின் காதல் கதை (உயிரே), க்ரிப்டோகிராஃபி எஞ்சினியர் ரிஷி காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்படும் களம்  (ரோஜா), ஒரு நாள் முதல்வராக ஒரு பத்திரிகையாளர் (முதல்வன்), ஸ்லாஷர் வகைமையைச் சேர்ந்த திகில் படம் (விசில்), ஷங்கர் - ரஜினியின் இரண்டு வெற்றிப்  படங்கள்  (சிவாஜி, எந்திரன்) போன்ற படங்களில் அவரின் பங்களிப்பு படத்தின் வெற்றி தோல்வியையும் தாண்டி இருந்தது. இயக்குனர் பாரதிராஜாவோடு அவர் இணைந்த 3 படங்களும் (நாடோடி தென்றல், கண்களால் கைது சி, பொம்மலாட்டம்) பெரிய பணிக்க வெற்றியை பெறாவிட்டாலும், அவரின் பங்களிப்பு அப்படங்களை மற்றும் ஒரு தளத்திற்கு கூட்டிச் சென்றன.

பெரிய இயக்குனர்களின் படங்கள் மட்டுமல்லாமல் அப்போது வந்த புதிய இயக்குநர்களோடும் எந்த பந்தாவும் இல்லாமல் அவரால் வேலை செய்ய முடிந்தது. ரவிச்சந்திரனின் கண்ணெதிரே தோன்றினாள், காந்தி கிருஷ்ணாவின் செல்லமே, நிலாக்காலம், ஆனந்தத் தாண்டவம் , ஒளிப்பதிவாளர்-இயக்குனர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே , ஒளிப்பதிவாளர்-இயக்குனர் ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களிலும் அவர் வசனகர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். சுஜாதாவின் பங்களிப்பு இல்லாத வெற்றிடத்தை அவரோடு பணியாற்றிய எல்லா இயக்குனர்களின் பின்னாளைய படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் அவரின் கற்றதும் பெற்றதும், மின்னம்பலம் கட்டுரைகளில்,  அவர் வேலை செய்யும் படங்களை பற்றிய ஒரு சின்ன எதிர்பார்ப்பையும் அவர் கூட்டிய வண்ணம் இருந்தார். வெறும் வசனகர்த்தாவாக நின்று விடாமல் பெண்டாமீடியா மூலம் சில படங்களையும் அவர் தயாரித்திருந்தார்.  "திரைக்கதை எழுதுவது எப்படி" என்கிற புத்தகத்தையும் அவர் எழுதியிருக்கிறார். அதற்கு முன்னர் திரைப்படத் துறையில் உள்ளவர்களே கூட அப்படி ஒரு புத்தகத்தை எழுத முன்வராதது ஒரு பெரிய முரண்.

அவரின் பங்களிப்பில் கமல்ஹாசனின் மருதநாயகம் வெளிவராததும் திரைப்பட ரசிகர்களுக்கு  ஒரு பேரிழப்பே. இயக்குனர் மணிரத்னத்தின் குரு மற்றும் வெளிவராத லாஜோ என்கிற திரைப்படங்களின் விவாதத்தில் அவர் பங்களித்திருக்கிறார். அவர் பங்களிப்பிற்கு ஒரு உதாரணம், ரோஜா படத்திற்காக காஷ்மீர் பற்றி ஒரு முன்னாள் கவர்னர் ஜக்மோகன் எழுதிய "மை ஃப்ரோஷன் டர்புலன்ஸ் இன் காஷ்மீர்"  புத்தகம் உட்பட அந்த தலைப்பில் வெளிவந்த புத்தகங்களையெல்லாம் படித்த பின்னரே அவர் கதை விவாதத்தில் பங்கேற்கிறார். வெறும் துறை சார்ந்த பொதுவான அறிவு மட்டுமல்லாமல் திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும் முழுவதும் படித்துவிட்டு அவர் ஒரு கதைக்குள் அவர் வரும் போது அந்த மொத்த கதையின் வண்ணமே மாறிவிடுகிறது. அவரின் மறைவுக்கு பின்னால் பல சுவாரசியமான படங்கள், இயக்குனர்கள், திரைக்கதையாசிரியர்கள் வந்திருந்தாலும் அவர் போல யாரும் வரவில்லை என்பதே உண்மை.

அவரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் "இந்த மாயாலோகத்தின்  ஒழுங்கற்ற ஒழுங்குதான் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதைத் தள்ளி நின்றுதான் என் போன்றவர்களால் கவனிக்க முடிந்தது. நல்ல நண்பர்களின் காட்சிகளுக்கு மெருகூட்டவும் சற்று புத்திசாலித்தனம் கலக்கவும் என் எழுத்து பயன்பட்டது" என்கிறார். எந்தப் படத்தின் வெற்றியையும் அவர் தனதாக்கிக் கொள்ளவில்லை. அதே போல "எத்தனையோ தொடர்பற்ற காரணங்களுக்காக படங்கள் வெற்றியடையலாம்" என்கிற உண்மையையும் அவர் புரிந்து வைத்துக்  கொண்டிருந்ததால், அவர் தொடர்ந்து எந்த வெற்றி மயக்கமும் இல்லாமல் பயணிக்க முடிந்தது. அவர் இன்று இருந்திருந்தால், இன்னும் புது காலங்களில் அவர் பங்களிப்பு செய்திருந்தால் என்கிற ஒரு சின்ன கற்பனையே அவ்வளவு சந்தோஷம் தருகிறது. இன்னும் சொல்லப் போனால், அவர் இருந்திருந்தால் வைரஸுக்கு என்ன சொல்லி இருப்பார், புதிய தொழில் நுட்பங்களுக்கு என்ன சொல்லி இருப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொரு சுஜாதாவின் உண்மையான ரசிகரிடத்திலும் இருந்தபடியே இருக்கும்.

ஒரு முறை அவரைப் பற்றி குறிப்பிடுகையில் எழுத்தாளர்களில் அவர் ஒரு விஞ்ஞானி - விஞ்ஞானிகளில் அவர் ஒரு எழுத்தாளர் எனச் சொல்லப்பட்டிருந்தது. அந்த வெற்றிடம் அப்படியேதான் தொடர்த்து கொண்டேயிருக்கும். காரணம் இந்த வெற்றிடம் நிரப்பப் படுவதற்காக அல்ல, நிரம்பித் தளும்புவதற்காகவும்தான்.

- டோட்டோ (totokv@gmail.com)  

Respond to uma@behindwoods.com
Behindwoods is not responsible for the views of columnists.

ABOUT THIS PAGE

This page hosts the views of the authors of the column. The views are generally about films, movie reviews, movie news, songs, music, film actors and actresses, directors, producers, cinematographers, music directors, and all others that contribute for the success or failure of a film. People looking for movies online, movie reviews, movie analysis, public response for a movie, will find this page useful.